அதிமுகவின் “தமிழ் ஆட்சி மொழி” தீர்மானம் - ஒபிஎஸ், இபிஎஸ் ”ஈகோ”வால் பல கோடி செலவழித்தும் நிராகரிப்பு
சென்னை: இபிஎஸ், ஒபிஎஸ் அதிகாரப்போட்டியால் நேற்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்படாத அதிமுகவின் 23 தீர்மானங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற தீர்மானமும் ஒன்று.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என ஓ.பி.எஸ். தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு நேற்று அதிகாலை வெளியான பரபரப்புடன் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் கூடியது.
பொதுக்குழுவில் நிறைவேற்ற தயாரிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்து, ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்ததால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அமைப்புத் தேர்தல்
இந்த நிலையில் பொதுக்குழுவில் தள்ளுபடி செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அனைத்து விதமான அமைப்புத் தேர்தல்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஒப்புதலும் அங்கீகாரமும் பாராட்டும் என்று முதல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திமுகவுக்கு கண்டனம்
2 வது தீர்மானத்தில் அதிமுகவின் சாதனைகளும், 3 வது தீர்மானத்தில் அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்ததற்கு எதிராகவும், 4 வது தீர்மானத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததற்காகவும், 5 வது தீர்மானத்தில் மின்வெட்டு பிரச்சனை தொடர்பாகவும், 6 வது தீர்மானத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், 7 வது தீர்மானத்தில் திராவிட மாடல் என்ற பெயரில் கபட நாடகம் என்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவின் மீது பொய் வழக்கு
8 வது தீர்மானத்தில் மேகதாது அணையை தடுக்கவும், 9 வது தீர்மானத்தில் கச்சத்தீவை மீட்கவும், 10 வது தீர்மானத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரை குறைக்காத திமுக அரசை கண்டிப்பதாகவும், 11 வது தீர்மானத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டிப்பதாகவும், 12 வதில் நூல் விலையேற்றத்தை தடுத்து நிறுத்தவும், 13 வது தீர்மானத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுகவை கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழ் ஆட்சி மொழி
14 வது தீர்மானத்தில் மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அமர்த்தவும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. 15 வது தீர்மானத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிரதமர் மோடிக்கு பாராட்டு
16 வது தீர்மானத்தில் கொரோனா காலத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உலகில் அளவில் இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி தலைநிமிர வைத்திருக்கிறார் என்றும், 2 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியின் காரணமாக இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படவில்லை என்றும், இதை அமெரிக்காவே பாராட்டி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது

மதங்களில் தலையிடுவதற்கு எதிர்ப்பு.
17 வது தீர்மானத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், 18 வது தீர்மானத்தில் வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில் குடும்ப முதலீடுகளை திமுக அரசு செய்வதாகவும், 19 வது தீர்மானத்தில் பத்திரிகை, வலைதள, சமூக செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு தொடரும் திமுக அரசை கண்டிப்பதாகவும், தீர்மானம் 20-ல் ஈழத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வை வலியுறுத்தியும், 21 வது தீர்மானத்தில் அனைத்து மதங்களை சமமாக நடத்தவும், தேவையின்றி தலையிடக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

போப் ஆண்டவருக்கு நன்றி
தீர்மானம் 22-ல் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப் ஆண்டவருக்கு நன்றி தெரிவித்தும், கிறிஸ்தவ மதத்தை தழுவிய பட்டியலின மக்களுக்கு சலுகைகளை தொடரவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. 23 வது தீர்மானத்தில் அதிமுகவின் வளர்சிக்காக பாடுபட்டவர்களின் நினைவுகளை நெஞ்சில் நிலைநிறுத்தி அதற்காக உழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications