கணவருடன் பாக்ஸிங் வரமறுத்த சீமான் - தமிழ்நாட்டு மக்களுக்கு மாபெரும் வெற்றி.. வெற்றி.. வீரலட்சுமி!
சென்னை: தமது கணவருடன் பாக்ஸிங் போட்டிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வர மறுத்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமது தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படைக்கும் மாபெரும் வெற்றி என அதன் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தவர் வீரலட்சுமி. ஆனால் விஜயலட்சுமி ஒரு கட்டத்தில் வீரலட்சுமி தம்மை கஸ்டடியில் வைத்து அடைத்து சித்ரவதை செய்வதாக புகார் கூறியதுடன் சீமானுக்கு எதிரான புகாரையும் வாபஸ் பெற்றுவிட்டார். அத்துடன் பெங்களூர் சென்றுவிட்டார் நடிகை விஜயலட்சுமி.

ஆனால் விஜயலட்சுமியை ஆதரித்ததால் வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் தொடருகிறது. வீரலட்சுமி மன்னிப்பு கேட்க கோரி சீமானும், சீமான் மன்னிப்பு கேட்க சொல்லி வீரலட்சுமியும் வழக்கு, மான நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ், என இருதரப்பும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
என் கையால சாவு: இந்நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்ணே என்னோடு பாக்ஸிங் வர்றீங்களா? டவரில் ஏறி பாக்ஸிங் போடலாமா? என பேசினார். சீமான் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், பாக்ஸிங் செய்ய நான் ரெடி.. நாள், நேரத்தை அவங்களே குறிக்கட்டும்.. என் கையால்தான் சாவனும்னு இருந்தா என்ன செய்யுறது என்றார்.

தேதி, இடம் அறிவித்த வீரலட்சுமி: இதனிடையே வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், திருவள்ளூர் மாவட்டம் அருகே தை 1-ந் தேதி என் கணவருடன் சீமான் பாக்ஸிங் போட்டி இந்த இடத்தில்தான் நடைபெறும். பரிசு தொகை என்ன என்பது போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார்.
நான் புலி.. பாக்ஸிங் போகலை: இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த சீமான், புலியை பூனை சண்டைக்கு கூப்பிட்டால் என்ன செய்யும்? புலி பேசாமல் அமைதியாக கடந்து போய்விடும். நான் புலி. அப்படித்தான் கடந்து போகிறேன் என்றார்.

தோல்வியை ஒப்புக் கொண்ட சீமான்: இதற்கும் வீரலட்சுமி ஒரு பதில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாய் தமிழ்நாட்டு மக்களே! சீமான் அவர்கள் எனது கணவரோடு பாக்ஸிங் செய்வதாகவும் அந்த பாக்ஸிங் செய்யும் இடத்தையும் தேதியையும் எங்களை குறிக்க சொல்லி தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி, பாக்ஸிங்குக்கான இடத்தையும் தேதியையும் நாங்கள் குறித்து வெளியிட்டிருந்தோம். ஆனால் 24 மணிநேரத்துக்குள் சீமான், தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் இன்று.

தமிழருக்கு கிடைத்த வெற்றி: பாக்ஸிங் செய்ய முடியாதுஎன சீமான் சொல்லி இருக்கிறார். அதனால் சீமான் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று அவரே வெளிப்படுத்தி இருக்கிறார். சீமான் அவர்களது தோல்வி, நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழர் முன்னேற்றப் படைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications