“சனாதன கைக்கூலி”.. சீமானை விரட்டும் அருந்ததியர் சர்ச்சை! ஆர்ப்பாட்டம் அறிவித்த தமிழ் புலிகள் கட்சி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தமிழ் புலிகள் கட்சி
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று சீமான் பேசிய சர்ச்சை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சீமானின் பேச்சை கண்டித்து பல இடங்களில் அவரது உருவ பொம்மையை எரித்த தமிழ் புலிகள் கட்சியினர் தற்போது சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்று கடந்த மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,09,906 வாக்குகளை பெற்று பெரும் வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,819 வாக்குகளை பெற்றார்.

3 வது இடம்
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நாம் தமிழர் வேட்பாளர் மேனகா அதிமுக வேட்பாளரை விட பல மடங்கு குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார். அவருக்கு மொத்தம் 10,817 வாக்குகளே கிடைத்து உள்ளன. இந்த இடைத்தேர்தலில் அதிகளவிலான வாக்குகளை பெற்று முன்னணி அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ள நினைத்த நாம் தமிழரை இந்த முடிவுகள் ஏமாற்றத்தை கொடுத்தது.

குறைந்த வாக்குகள்
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். ஆனால், தற்போது வெளியான வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவுகள்படி 2021 ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் குறைவான வாக்குகளையே பெற்று இருக்கிறது.

ஜாதி வாக்குகள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த மேனகாவை வேட்பாளராக நிறுத்தியும் நாம் தமிழர் கட்சியால் கடந்த முறையை விட கூடுதலான வாக்குகளை பெற இயலவில்லை. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக கட்சிகள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியும் ஜாதி அடிப்படையிலான வாக்குகள் கிடைக்கவில்லை.

அருந்ததியர்கள் பற்றி பேச்சு
இதற்கு சீமானின் சர்ச்சை பேச்சும் காரணம் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் முதலியார்களை பற்றி உயர்வாக பேசிய சீமான் அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தூய்மை பணி செய்வதற்காக விஜயநகர பேரரசால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்று தெரிவித்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தடுத்த அருந்ததியர்கள்
சீமானின் பேச்சுக்கு அருந்ததியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் வலுத்தன. ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய சென்ற இடமெல்லாம் அருந்ததியர்கள் அவர்களுக்கு எதிராக நின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிக்கு உள்ளேயே அனுமதிவில்லை. இதனால், கடந்த 17 ஆம் தேதி மோதலும் வெடித்தது.

உருவ பொம்மை எரிப்பு
தமிழ் புலிகள் கட்சியினரும் சீமானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அவரது கொடும்பாவி எரிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, தேனி, இராமநாதபுரம், நாமக்கல், பழனி என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சீமானின் உருவ பொம்மையை எரித்து தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்
இதனை தொடர்ந்து சீமான் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் முடிந்து அவரது பேச்சுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 7 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கண்டன ஆர்பாட்டத்தை நாகை திருவள்ளுவனின் தமிழ் புலிகள் கட்சி ஏற்பாடு செய்து உள்ளது.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
"ஆதிக்குடிகளை இழிவுபடுத்தி தமிழர் ஒற்றுமையை சிதைக்கும் சனாதன கும்பலின் கைக்கூலிகளை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!" என்று அறிவித்து இருக்கும் அக்கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மமக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications