செம கூட்டம்.. அருந்ததியர் சர்ச்சை! சீமானை கண்டித்து விண்ணை முட்டிய முழக்கம்! சென்னையில் ஆர்ப்பாட்டம்
அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சென்னை: அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியதால் ஏற்பட்ட சர்ச்சை தேர்தல் முடிந்த பிறகும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. பல இடங்களில் சீமானின் பேச்சை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்த தமிழ் புலிகள் கட்சியினர் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்று கடந்த மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா அதிமுக வேட்பாளரை விட பல மடங்கு குறைவான வாக்குகளை பெற்றார். அவருக்கு மொத்தம் 10,817 வாக்குகளே கிடைத்து உள்ளன.

வாக்குகள் குறைந்தன
அதிகளவிலான வாக்குகளை இந்த இடைத்தேர்தலில் பெற்று முன்னணி அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ள நினைத்த நாம் தமிழருக்கு இந்த முடிவுகள் ஏமாற்றத்தை கொடுத்தன. 2021 சட்டசபைத் தேர்தலில் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.

வேட்பாளர் மேனகா
ஆனால், தற்போது வெளியான இடைத்தேர்தல் முடிவில் 2021 ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் குறைவான வாக்குகளையே பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த மேனகாவை வேட்பாளராக நிறுத்தியும் நாம் தமிழர் கட்சியால் கடந்த முறையை விட கூடுதலான வாக்குகளை பெற இயலவில்லை.

அருந்ததியர் சர்ச்சை
காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியும் ஜாதி அடிப்படையிலான வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைக்கவில்லை. இதற்கு அருந்ததியர் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தூய்மை பணி செய்வதற்காக விஜயநகர பேரரசால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்று சீமான் தெரிவித்தார்.

கொந்தளித்த அருந்ததியர்கள்
சீமானின் பேச்சுக்கு அருந்ததியர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியினர் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய சென்ற இடமெல்லாம் அருந்ததியர்கள் அவர்களுக்கு எதிராக நின்றனர். குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிக்கு உள்ளேயே நாம் தமிழர் கட்சியினரை அனுமதிவில்லை. இதனால், கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி மோதலும் வெடித்தது.

சீமான் கொடும்பாவி
அதேபோல், சீமானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழ் புலிகள் கட்சியினரும் அவரது கொடும்பாவி எரிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஈரோடு, நாமக்கல், தேனி, பழனி, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று சென்னையில் மோதல்
இதனை தொடர்ந்து சீமான் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் சீமானை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை கட்சியினர் நடத்திய போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினருக்குக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற அருந்ததியின மக்களை நாம் தமிழர் கட்சியினர் ஜாதி பெயர் சொல்லி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
|
இன்று ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாகை திருவள்ளுவனின் தமிழ் புலிகள் கட்சி சீமானை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. "ஆதிக்குடிகளை இழிவுபடுத்தி தமிழர் ஒற்றுமையை சிதைக்கும் சனாதன கும்பலின் கைக்கூலிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அக்கட்சி அறிவித்து இருந்தது. இதில் முற்போக்கு இயக்கங்கள், கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications