தமிழக முதல்வர் நாற்காலியில் விஜய்யை அமர வைக்க வேண்டும்.. நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் ஆர்டர்
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், வெற்றி பெற உண்மையாக உழைக்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார் எனவும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார் அதற்கான தலைவராக விஜய்யும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறியதால் மாவட்ட தலைவர்களை மாவட்ட செயலாளர்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்புதல் செயற்குழுவில் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், சென்னையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய புஸ்ஸி ஆனந்த், தளபதி விஜய் தலைவர் ஆகிவிட்டார். இனி ஒரே தலைவர் தான், எனவே மாவட்ட தலைவர்கள் இனி மாவட்டச் செயலாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று கூறினார்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேலை செய்ய வேண்டும், மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார் என அவர் தெரிவித்தார்.
விஜய் மக்கள் இயக்கம் எப்படி செயல்பட்டதோ அதேபோல் தமிழக வெற்றி கழகமும் பொதுமக்களின் சேவையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகி, மாவட்ட செயலாளர்களும் எதற்கும் பயப்பட வேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்குள் தலைவர் விஜய் இருக்கிறார். பொதுமக்களின் சேவைக்கு எது எதிராக வந்தாலும் அதை துடைத்து எரியுங்கள்.
விலையில்லா உணவகம், ரொட்டி பால் முட்டை திட்டம், தளபதி பயிலகம், நூலகம் என அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும். கட்சியின் பெயரை டெல்லியில் பதிவு செய்து வந்த நொடியே கட்சியின் பெயர் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அதுதான் தலைவர் விஜயின் பலம்.
2026 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் யார் என்று பொதுமக்கள் தற்போது யோசித்து வருகின்றனர். எல்லோருடைய கருத்துக்கணிப்பில் 65 சதவீதம் தமிழக வெற்றி கழகம் முன்னிலையில் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும்.
கட்சியின் தலைவர் விரைவில் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி கொடி நிறங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். இனிமேல் கட்சியின் முக்கிய தகவல்களை முழுவதும் தலைவர் தான் அறிவிப்பார். முதலில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் பணியை முடித்துவிட்டு தினந்தோறும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும். 2026 இல் தமிழகத்தின் முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும். அதற்கான சேவைகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சி வேலை செய்யக்கூடாது. தற்போது இருந்தே நாம் உழைத்தால் தான் வெற்றி பெற முடியும். ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தற்போது இருக்கும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் சொல்லும் விஷயங்களையும், வாக்குறுதிகளையும், நாம் இப்போதே மக்களுக்கு செய்து காட்டி தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு முன்னால் இருக்க வேண்டும் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications