அரசியல் பண்ணையார்களை விரட்டுவோம்.. விரைவில் பூத் கமிட்டி மாநாடு.. தவெக விழாவில் விஜய் அறிவிப்பு!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பாக விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அப்போது தவெகவின் சக்தி அனைவருக்கும் தெரியும் என்று கூறிய விஜய், தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் சக்தியாக தவெக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்கா விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், அரசியல் என்றாலே வேற லெவந்தான். தமிழக அரசியலில் நாம் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்து வருகிறோம். திடீரென அரசியலுக்கு வருவதால், ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தானே செய்யும். அவர்கள் தம்முடைய பொய்கள் உடைந்து போகும் என்று அஞ்சுகிறார்கள். மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் வரவேற்பார்கள்.
அரசியல் களத்தில் வரும் எதிர்ப்புகளை இடதுகையால் டீல் செய்து, 2ஆம் ஆண்டில் தவெக கால் வைத்துள்ளது. இந்த காலக்கட்டம் தான் முக்கியமானது. ஆல்மரம் போல் ஒரு அரசியல் கட்சி வளர வேண்டுமென்றால், அதன் வேர்களான கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். அதற்காகவே மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்து வருகிறோம்.
தவெக நிர்வாகிகள் இளைஞர்களாக இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது பின் நின்றவர்கள் இளைஞர்கள்தான். அவர்களால் மட்டுமே 1967, 1977ல் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதேபோல் கட்சி நிர்வாகிகள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்கள். எளிய குடும்பங்களில் பிறந்தவர்கள் அரசியலுக்கு வரக் கூடாதா என்ன?
தவெக எளிய மக்களுக்கானது. தவெக ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி அல்ல. முன்பெல்லாம் பண்ணையார்கள் பதவியில் இருந்தார்கள். இப்போது பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள். மக்கள் நலன், நாட்டு நலன் பற்றி கவலையில்லாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுகிறார்கள்.
அப்படியான பண்ணையார்களை தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் அரசியலில் இருந்து அகற்றுவது தான் கட்சியின் முதன்மை நோக்கம். அதேபோல் தேர்தலை சந்திக்க பூத் கமிட்டி மிகவும் முக்கியம். சாதாரணமாக 69 ஆயிரம் பூத் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சக்தி எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல என்பது தெரியும்.
தற்போது மும்மொழிக் கொள்கை என்று புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள். அதனை செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்கள். இது எல்யுஜி, யுகேஜி மாணவர்கள் சண்டை போடுவதை போல் உள்ளது. எவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கும் போது, பாசிசமும் பாயசமுமான திமுக மற்றும் பாஜக சோசியல் மீடியாவில் ஹேஷ்டாக் போட்டு கொண்டுள்ளார்கள்.
இவர்கள் இருவரும் சண்டையிடுவதை போல் அடித்து கொள்வார்களாம். அதனை நாம் நம்ம வேண்டுமா? What bro, Its very Wrong Bro.. நம்ம ஊர் சுயமரியாதை ஊர். நாம் எல்லோரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தனிப்பட்ட வகையில் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால்.. அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ?.. அதனால் தவெக சார்பாக நாமளும் பொய் பிரச்சாரங்களை புறந்தள்ளிவிட்டு உறுதியாக எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications