மாப்ள அவரு தான்.. ஆனால், சட்டை என்னோடது! தவெகவில் மாஸாக எண்ட்ரி கொடுக்கும் எஸ்ஏசி! இந்த பதவியா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்ட தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்தால் ஓரம் கட்டப்பட்ட விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அவருக்கு அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜயே இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய் ஒரே வருடத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு மாநில மாநாடுகளை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டி இருக்கிறார். இடையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனை என பிசியான அரசியல்வாதியாக மாறினார்.
இருந்தபோதும் மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு விஜய் மீது முன் வைக்கப்பட்டது. அதனை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்தார் விஜய்.

விஜய் அரசியல்
திட்டமிட்டபடி திருச்சியில் முதல் பிரச்சார பயணம் தொடங்கியது. அதற்குப் பிறகு திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெற்ற நிலையில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பொதுவெளியில் விஜய் தலை காட்டவில்லை, இதற்கிடையே கட்சியிலும் பலத்த சலசலப்பு நிகழ்ந்தது. கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட புஸ்ஸி ஆனந்த் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை மாவட்ட செயலாளர்தான் பொறுப்பு எனக் கூறியதோடு தலைமறைவானர்.
தமிழக வெற்றிக் கழகம்
இதனால் தமிழக வெற்றி கழகத்தின் மீது பலத்த விமர்சனங்கள் எழுந்தது. ஏற்கனவே விஜய்க்கு அடுத்து புஸ்ஸி ஆனந்த் என்பதை தாண்டி, புஸ்ஸி ஆனந்துக்கு அடுத்து தான் விஜய் என்பதைப் போல சில மாவட்ட செயலாளர்கள் நடந்து கொண்டனர். புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை பெரிதாக போடுவது, அவரது காலில் விழுவது என சில சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சியை முழுமையாக மறுசீரமைப்பு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
புஸ்ஸி ஆனந்த்
குறிப்பாக புஸ்ஸி ஆனந்துக்கான அதிகாரங்களை குறைக்கும் வகையில் சரியான நபரை தேடி வந்தார். இந்த நிலையில் தான் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சிக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். கொள்கை பாடல் வெளியீடு, கொடி அறிமுகம், மாநில மாநாடுகளில் மேடையில் இடம் கொடுக்கப்படாத எஸ்ஏ சந்திரசேகருக்கு மாநாட்டின் பார்வையாளர்களில் முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாத காலமாக கட்சியில் நடந்த நிகழ்வுகள் குறித்து எஸ்ஏ சந்திரசேகர் விஜயிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த்
குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆனந்தை ஒரேடியாக கட்சியை விட்டு நீக்க முடியாது என்பதால் அவருக்கான அதிகாரங்களை குறைக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை இல்லாத வகையில், அவை தலைவர் பொறுப்பு எஸ்ஏ சந்திரசேகருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் உலாவுகின்றன. ரசிகர் மன்றமாக இருந்த போதும் அதை மக்கள் இயக்கமாக மாற்றிய போதும் சந்திரசேகர் தான் முழு பொறுப்பையும் ஏற்று இருந்தார்.
தலைமை மாற்றம்
அதற்கு பிறகு புதுச்சேரியில் எம்எல்ஏவாக இருந்த ஆனந்துடன் விஜய்க்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் சந்திரசேகரை ஓரம்கட்டி விட்டு விஜயின் வலதுகரமாக மாறினார் புஸ்ஸி ஆனந்த். இந்த நிலையில் கட்சி நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் புஸ்ஸி ஆனந்த் ஒதுக்க ஆரம்பித்த விஜய், தற்போது தனது தந்தையை மீண்டும் கட்சிக்குள் அழைத்து வந்திருக்கிறார். விரைவில் அதிகார பூர்வ பதவி வழங்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications