கோயம்பேட்டில் உச்சிவெயில்! வியர்வை சொட்ட சொட்ட! முகத்தை துடைத்தபடியே தமிழிசை வாக்குவாதம்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி தர மறுக்கும் காவல் துறையினருடன் முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக நிர்வாகியுமான தமிழிசை சவுந்திரராஜன் வாக்குவாதம் செய்து வருகிறார். உச்சி வெயிலில் முகத்தை துடைத்தபடியே தமிழிசை வாக்குவாதம் செய்யும் காட்சி வைரலாகியுள்ளது.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பூத் வாரியாக பாஜக தொண்டர்கள் பொதுமக்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று கையெழுத்தை பெறுகிறார்கள். அது போல் சமக்கல்வி இணையதளத்தில் டிஜிட்டல் வடிவில் கையெழுத்திடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் கையெழுத்தை பெறும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கூட்டமாக இருப்பதை அறிந்த போலீஸார் அனுமதி பெறாமல் இது போல் கையெழுத்து இயக்கம், போராட்டம் என நடத்தக் கூடாது என தெரிவித்தனர். அப்போது போலீஸாருக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழிசை, மக்களிடம் நாங்கள் மும்மொழி கொள்கை குறித்து எடுத்து கூறி அது தேவை என அவர்களிடம் கையெழுத்து வாங்கும் போராட்டம்தான் இது. பாமரர்களுக்கு 3 மொழி சொல்லிக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். பொதுமக்களை அமைதியான முறையில் பார்ப்பது தவறா?
எனினும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவது தவறு என கூறிய போலீஸார் கையெழுத்து பெறுவதை தடுத்தனர். இதனால் பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழிசை கைது செய்யப்பட்டார்.
அவர் வேனில் ஏற மறுத்து அந்த இடத்திலேயே போலீஸாரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் நடத்தி வருகிறார். மும்மொழி கொள்கை குறித்த பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுதான் வருகின்றன. அப்படியிருக்க இந்த கையெழுத்து இயக்கம் எதற்காக என போலீஸார் கேள்வி எழுப்பினர்.
ஆனால் தமிழிசை அவர்களுக்கு விளக்கம் அளித்து வாக்குவாதம் செய்கிறார். சென்னையில் வெயில் கொடுமை தொடங்கிவிட்ட நிலையில் வியர்வை சொட்ட சொட்ட தமிழிசை கைகுட்டையால் துடைத்தபடியே போலீஸாரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
தங்களை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள். ஆனால் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்தவுடன் கைது செய்யுங்கள் என தமிழிசை வாதம் செய்கிறார். மேலும் ஒரு முன்னாள் ஆளுநருக்கே மக்களை சந்திக்க உரிமை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications