"கேப்டன்" உடல் நலம் பெற வேண்டும்.. தமிழிசையின் திடீர் வாழ்த்து ஏன்...கூட்டணிக்கு அடி போடுகிறாரோ!!
விஜயகாந்துக்கு தமிழிசை சவுந்தராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: இப்போ குழப்பம் என்னன்னா, தமிழிசை எதுக்காக இப்படி "அடி" போடுகிறார் என்பதுதான்!!
விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லை. அதனால் சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பி போயுள்ளார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, 2-வது மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.
அங்கு சில வாரங்கள் தங்கி சிகிச்சை பெற்று கொண்டு நாடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் நல்லபடியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்ப வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரார்த்திக்கிறேன்
இது சம்பந்தமாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக செய்திகள் மூலம் அறிந்தேன் சகோதரர் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று குணமடைந்து திரும்பி மக்கள் பணிதொடரவேண்டி உளமாற வேண்டி பிரார்த்திக்கிறேன். அவரது பயணம் வெற்றிகரமாக அமையட்டும் என பாஜக வாழ்த்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

குலுங்கி அழுதார்
சக அரசியல் கட்சி தலைவருக்கு தமிழிசை வாழ்த்து சொல்லியிருப்பதில் தவறில்லைதான். ஆனால் இவ்வளவு நாள் விஜயகாந்த் இங்கேதான் இருந்தார். வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து, வந்ததும் வராததுமாக முதல் வேலையாக கருணாநிதி சமாதிக்கு சென்று குலுங்கி அழுதார் விஜயகாந்த். பீச்சில் நடக்க முடியாமல் அவர் தள்ளாடி வந்ததையும், உணர்ச்சிவசப்பட்டு கருணாநிதி சமாதி முன்பு அழுததையும் பார்த்து நாம் எல்லோருமே நிலைகுலைந்து போனோம்.

வருத்தப்பட்டனர்
விஜயகாந்த் அந்த அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்போதிலிருந்து நேற்றுவரை அவர் சென்னையில்தான் இருந்தார். வீட்டில்தான் ஓய்வு எடுத்து வந்தார். அவரை யாருமே போய் நேரில் சென்று சந்திக்கவில்லை. குறிப்பாக கூட்டணியில் இருந்தவர்களே வந்து பார்க்கவில்லை என்று விஜயகாந்த் குடும்பத்தினரே வருத்தப்பட்டதாக கூட செய்திகள் வந்தன.

கருணாநிதி மீது கோபம்
இவ்வளவு நாள் வீட்டில் உடம்பு சரியில்லாமல் இருந்த விஜயகாந்த்தை தமிழிசை ஏன் சென்று பார்க்கவில்லை? இப்போது ஏன் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கருணாநிதி மீதிருந்த கோபத்தில் அதிமுக, பாஜக என கூட்டணி வைத்தார் விஜயகாந்த்.

பாஜகவுக்கு ஏழரை
மோடி பிரதமராக பொறுப்பேற்றபோதுகூட டெல்லிக்கே சென்று கட்டிப்பிடித்து வாழ்த்தை சொல்லி விட்டு வந்தார் கேப்டன். இப்போது தேர்தலும் நெருங்கி வருகிறது. அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் என எல்லோருடனும் பாஜகவுக்கு ஏழரை.

அதிமுக-திமுக
அதனால் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தமிழிசை அடி போடுகிறாரா என தெரியவில்லை. அதற்கேற்றார்போல் தேமுதிகவும் இதுவரை கூட்டணி குறித்து வாயே திறக்கவில்லை. எப்படியும் திமுக, அதிமுகவை திட்டி தீர்த்து வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி இருக்காது என்பது தெரிந்த ஒன்றுதான்.

அக்கறையா?
மேலும் பாஜகவும் தேமுதிகவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது.எனவே 5 மாநில தேர்தல் முடிவால் நொந்துபோய் உள்ள நிலையில், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வருவதற்கு ஒரு அச்சாரத்தை தமிழிசை முன்கூட்டியே போட்டு வைக்க முயல்கிறாரா என்று தெரியவில்லை. அல்லது ஒரு டாக்டராக விஜயகாந்த் உடல் நிலை குறித்து அக்கறையுடன் வாழ்த்து தெரிவித்தாரா என்றும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
