படங்களை மட்டும் 3 மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா? - தமிழிசை பதிலடி!
சென்னை: மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் நடிகர் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், திமுகவினர்தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர்.

நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும். மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது. அப்படி சொல்வதென்றால் தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும்.
ஒரு சாதாரண அரசாங்க பள்ளி மாணவ மாணவியர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு அல்லது மலையாளமும் கற்றுக் கொண்டால் ஆந்திராவிலோ அல்லது கேரளாவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசுதான்.
மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?" என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் கல்வி நிதி ரூ.2,152 கோடி மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது, இதனால் தமிழ்நாட்டுக்கான நிதியை தர முடியாது என கூறியிருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.
பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்" என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications