"குளத்தில் தாமரை மலர்ந்ததுக்கே இப்படியா? சீக்கிரம் அலறப் போறீங்க..” சேகர்பாபுவுக்கு தமிழிசை ரிப்ளை!
சென்னை: ஆய்வின் போது கிண்டல் செய்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் கொடுத்துள்ளார். "குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே... வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்." எனக் கூறியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

பசுமை பூங்காவில் பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் இந்த பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை பார்த்த அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளிடம், "தாமரை வளரவே கூடாது.. இங்க என்ன இப்படி வளர்ந்திருக்கு" என கிண்டலாக கூறினார். இதனால் அங்கு கலகலப்பான சூழல் ஏற்பட்டது.
அமைச்சர் சேகர்பாபு, "தாமரை வளரவே கூடாது" என அதிகாரிகளிடம் கிண்டலாக கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்... குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே... வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.
அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவதை மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம். சாத்தியம்... லட்சியப் பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications