ஆம்னி பஸ்ஸில் போக போறீங்களா.. நாளை முதல் மறந்தும் எடுத்துட்டு போயிடாதீங்க.. முக்கிய அறிவிப்பு
சென்னை: செப்டம்பர் 29ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மிலாடி நபி விடுமுறை, நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை இல்லை என்றாலும் (காலாண்டு விடுமுறை பள்ளிகளுக்கு), கடைசி நேரத்தில் மாற்றுவது கடினம் என்ற நிலை உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசு துறை நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டன.
இதேபோல் செப்டம்பர் 28-ம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்க கொடுத்தால் அதை வாங்க வேண்டாம் என கண்டக்டர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 29ம் தேதி முதல் அதாவது நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகளில் ₹2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 28ம் தேதிக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. 10 சதவீதம் மடடுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் மத்திய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில், நாளை 29ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும், தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும் பயணத்தையும் எங்கள் அனைத்து ஆம்னி பேருந்துகளில் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஆகஸ்ட் 31 நிலவரப்படி ரூ.0.24 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி ஆகும். அதாவது, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியான மே 19-ம் தேதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 93% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருந்தது. இந்நிலையில் மீதமுள்ள நோட்டுகளும் பெரும்பாலும் வந்திருக்கும் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு வேளை உங்கள் கையில் இன்னமும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் எப்படி மாற்றுவது? 20,000 ரூபாய் வரை ஒரே நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஆவணமும் இல்லாமல் உங்கள் வங்கியில் போய் நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 30க்குள் மாற்றிக்கொள்ளலாம். அதற்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால பான் தகவல்களை செலுத்தி ரூபாய் 50,000 வரை மாற்றிக்கொள்ள முடியும். கே.ஒய்.சி- சரியாக செய்திருந்தால், எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம்.
உங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் அல்லாமல் ஆர்.பி.ஐ என் ரீஜனல் அலுவலகங்களிலும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மாற்றிக் கொள்ள முடியும். அதன் பிறகும் உங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டு இருந்தால், அதாவது அக்டோபர் 1ம் தேதி உங்கள் கையில் 2000 நோட்டு இருந்தால், அந்த பணம் செல்லாது. அரசு கால அவகாசத்தை நீட்டிக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.எனவே மக்களே விழிப்புடன் பணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications