"தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லை.. இது ஒரு பகல் கனவு பட்ஜெட்..! தமிழக பட்ஜெட்டை சாடும் அண்ணாமலை
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதனைப் பகல் கனவு பட்ஜெட் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம், அமைச்சர் பிடிஆர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை சட்டசபை கூடிய போது, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், இது தொடர்பாகப் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என முறையிட்டனர்.

அதிமுக வெளிநடப்பு
இருப்பினும், பட்ஜெட் தாக்கல் செய்வது மட்டுமே இன்றைய நிகழ்வு என்பதால் சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார். இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில், அவர் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அண்ணாமலை விமர்சனம்
அரசுப் பள்ளி மாணவிகள் ரூ 1000 உதவித் தொகை, பெரியார் கருத்துகளை மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்வது உள்ளிட்ட பல அறிவிப்புகள் பிடிஆரின் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து தமிழக அரசின் இந்தப் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த பட்ஜெட்டை பகல் கனவு பட்ஜெட் என விமர்சித்துள்ளார்.

பகல் கனவு பட்ஜெட்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 1. மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது 2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 'இன்றும்' நிறைவேற்றவில்லை 3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் எனத் தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்' செயல்படுத்த வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications