பிரதமர் வருவதற்கு.. 45 நிமிடங்கள் முன்பே வந்த பாஜக நிர்வாகிகள்! ஆளுநர் மாளிகையில் முக்கிய மீட்டிங்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டு ஆளுநர் மாளிகை திரும்பிய பிரதமர் மோடியைத் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து உள்ளனர்
Recommended Video
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தலைநகர் சென்னையில் தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10 வரை போட்டிகள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட்
தொடக்க விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். இன்று பிரதமர் ஆளுநர் மாளிகையில் தான் ஓய்வெடுக்கிறார். இதற்கிடையே கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழக பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு உள்ளனர்.

பாஜக நிர்வாகிகள் உடன் சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான உயர் நிலை குழுவினர் ஆளுநர் மாளிகையில் இப்போது பிரதமர் மோடி உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அனைவரும் பிரதமர் வருவதற்கு, சுமார் 45 நிமிடங்கள் முன்னரே ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். பிரதமர் வந்த உடன், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் அவருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தீவிர ஆலோசனை
தமிழகத்தில் பாஜக எப்படி உள்ளது? எட்டு ஆண்டுகளில் எந்தளவு வளர்ந்து உள்ளது உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட உள்ளது. மேலும், கட்சியை வளர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அடுத்தகட்ட திட்டம் குறித்தும் இதில் தீவிர ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், மாநிலத்தில் பாஜகவில் கட்சிக்குள் இருக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

மக்களவை தேர்தல்
இது தவிரத் தமிழக அரசியல் குறித்தும் 2024 மக்களவை தேர்தல் குறித்தும் ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2024இல் அதிக இடங்களைப் பெற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications