1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள்.. போட்டி தேர்வர்களுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் புத்தகங்களுடன் கூடிய சிறப்பு நூலகங்கள் மாநகராட்சியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2வது முறையாக அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இம்முறை பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு ரூ.2,150 கோடியை வழங்கவில்லை.

இதனால் மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்கான நிதியை விடுவித்துள்ளது. அதேபோல் பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். மொத்தமாக பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் ரூ.46,760 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2,676 அரசுப் பள்ளிகளில் ரூ.65 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதேபோல் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக மாநகராட்சியில் ஒரு லட்சம் புத்தகங்களுடன் கூடிய சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும். ஏனென்றால் ஏற்கனவே பூங்காக்கள், புத்தக நிலையங்களில் அமர்ந்து அவர்கள் படித்து வருகிறார்கள். மாநகராட்சியில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டால், அங்கு அவர்களுக்கு கூடுதல் உதவியாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications