வதந்தி பரப்பும் அரசியல் எதிரிகள்.. இன்பம் பொங்கும் தமிழ்நாடு என கோலமிடுங்கள்.. மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழக மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் வாழ்த்து கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 7வது முறையாக திமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்று கூறியுள்ள அவர், நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்ப முனையும் அரசியல் எதிரிகளை எதிர்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சமத்துவமே தமிழரின் பண்பாடு என்பதை உலகத்திற்கு உரக்கச் சொல்கின்ற வகையில் சாதி, மத, பாலின பேதமின்றி, இயற்கையைப் போற்றி, உழைப்புக்கு முதல் மரியாதை செலுத்தி, உழவுக்குத் துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மனிதநேயத் திருவிழாதான் பொங்கல் நன்னாள். அது ஒன்றுதான் நம் பண்பாட்டுத் திருநாள் என்பதைத் திராவிட இயக்கம் நிலைநாட்டி, மக்களின் திருவிழாவாகக் கொண்டாடச் செய்து வருகிறது.

அறுவடைத் திருநாளாம் பொங்கலின் அடையாளம் என்பது, வாழ்க்கையில் விடியல் ஏற்பட வேண்டும் என்பதுதான். அதனால்தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழர்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் உண்மையான மகிழ்ச்சிப் பொங்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களின் வாழ்விற்கு விடியல் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான உரையைக் காழ்ப்புணர்வுடன் மாண்புமிகு ஆளுநர் படிக்காமலும், தமிழ்த்தாய் வாழ்த்தினை மதிக்காமலும் வெளியேறினாலும், பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட அதன் தமிழாக்க உரை, இந்தியாவில் தமிழ்நாடு எந்தெந்த இலக்குகளில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலே அமைந்திருந்தது. இந்த அரசு அமைந்த நாள் முதலே பெண்களின் நலனுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல திட்டங்களிலும் பெண் பயனாளிகள் அதிகளவில் உள்ளனர். தமிழ்நாடு அரசின் சென்னையில் நாட்டுப்புறக் கலைகளை மக்கள் மன்றத்தில் அரங்கேற்றும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 2025 ஜனவரி 13 முதல் 17 வரை சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. உடன்பிறப்புகள் இத்தனை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் பொங்கலைக் கொண்டாடும்போது, உங்களில் ஒருவனான எனக்குள்ளும் அந்த உத்வேகமும் உற்சாகமும் ஊற்றெடுக்காமல் இருக்குமா? என்னை 'ஹாட்ரிக்’ வெற்றி பெற வைத்து, அடுத்த வெற்றிக்கும் உறுதியளித்திருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுடன் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடி, கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் பரிசுகளையும் பொங்கல் வாழ்த்துகளையும் வழங்கி மகிழ்ந்தேன். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, நாள்தோறும் வன்மத்துடன் வதந்திகளைப் பரப்பிட முனையும் அரசியல் எதிரிகள் இவற்றை எதிர்கொண்டபடியே, தெளிவான திட்டங்களுடனும், துணிவான செயல்பாடுகளுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்வாகத் திறனுடனும் கடமையாற்றும் திராவிட மாடல் அரசின் ஆட்சியில் அன்றாடம் நிறைவேறும் சாதனைகளால், 7வது முறையாக திமுகவே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். பொதுமக்கள் பங்கேற்புடன் பண்பாட்டுத் திருவிழாவாக, பொங்கல் நன்னாளைக் கொண்டாடுவோம். 'இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு, தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம். கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications