ஆளுநர் வழக்கு.. ஜனாதிபதி குறிப்பின் நோக்கம் அதுதான்.. 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை: தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக அரசு தரப்பில் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உச்சநீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.
அதாவது, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததோடு, இனி வரும் காலங்களில் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு ஒரு மாதம் வரையும், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிய வந்தது.

ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார். குறிப்பாக மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாத போது, உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா என்று 14 கேள்விகளை எழுப்பி இருந்தார்.
மு.க.ஸ்டாலின் கடிதம்
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், கடந்த 13ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்று.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
இந்தக் குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம். தமிழக அரசாங்கத்தால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
மாநில அரசு vs ஆளுநர்
இது மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படுபவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான ஆளுநரால் தடைபடுவதைத் திறம்படத் தடுக்கும் வகையில் உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாட்டைத் தடுத்திட ஆளுநர்களைப் பயன்படுத்திய விதத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம்.
ஆளுநரின் துஷ்பிரயோகங்கள்
குறிப்பாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற தாமதத்தை ஆளுநர்கள் ஏற்படுத்துகிறார்கள். உரிய அரசியலமைப்பு அல்லது சட்டக் காரணங்கள் இல்லாமல் அவற்றை நிறுத்தி வைக்கிறார்கள். முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் தலையிடுகிறார்கள், கல்வி நிறுவனங்களை அரசியல்மயமாக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
முக்கியமான தீர்ப்பு
அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆளுநர்களால் இதைச் செய்ய முடிந்தது. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய பெருமக்கள், உயர் அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள் அரசியலமைப்பு ஒழுக்கத்தின்படி செயல்படுவார்கள் என்று நம்பினர். இந்தச் சூழலில்தான், தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
வீட்டோ அதிகாரம்
அதன்படி மசோதாக்களைக் கையாளும் போது மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த ஆளுநர் "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலமும், மசோதாக்களை அவைக்குத் திருப்பி அனுப்பாமல் இருப்பதன் மூலமும் ஆளுநர் மசோதாக்களை செயலிழக்கச் செய்ய முடியாது. ஒரு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு, 2வது முறையாக ஒப்புதலுக்கு அனுப்பப்படும்போது ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது.
ஆளுநர்களுக்கு காலக்கெடு
பிரிவுகள் 200 மற்றும் 201-ன்கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுகள் தங்களுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் மத்திய அரசு தேவையற்ற வகையில் தலையிடாமல் இருப்பதை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு உறுதி செய்யும். நமது அரசியலமைப்பின் பாதுகாவலராக, கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஜனநாயகக் குடியரசை அடிப்படையாக கொண்ட நமது உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அரசியலமைப்பை சரியாக விளக்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை
ஆனால், வெளிப்படையாக பாஜக அரசு இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது. மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கினைக் கடைபிடிக்கும் ஆளுநரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களும் இந்தத் தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம். பாஜக அரசாங்கம் தனது சூழ்ச்சியின் முதல் அங்கமாக குடியரசுத் தலைவரை உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாஜக அரசு
ஆளுநர்களின் விவகாரத்தில் கேள்விக்குரிய பிரச்னை ஏற்கனவே நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ தீர்ப்பால் முடிவு செய்யப்பட்டிருக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது என்பது அனைவரும் அறிந்தது. ஆனாலும், பாஜக அரசு ஒரு பரிந்துரையைப் பெறுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது அவர்களின் தீய நோக்கத்தைக் குறிக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட, பாஜக-வை எதிர்க்கும் மாநில அரசுகள், கட்சித் தலைவர்கள் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தேன்.
ஒன்றிணைய வேண்டும்
உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, நமது உச்சநீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் உறுதி செய்தபடி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications