"அவப்பெயர் ஏற்படுத்தினால்.. இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை!" போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின், போலீசார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.
சிறந்து பணியாற்றும் போலீசாருக்கு பதக்கங்களை வழங்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
காவல்துறையினர் வழங்கிய அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தலைகுனிவு
அதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வீரதீர செயல்களைச் செய்த போலீசாருக்கான ஊக்கத்தொகை ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தப்படும். காவல்துறை நம் நண்பன் என்று மக்கள் சொல்லும் அளவுக்குச் செயல்பட வேண்டும். தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை போலீசார் செய்துவிடக் கூடாது. ஒரு காவலரோ, காவல் நிலையமோ தவறு செய்வதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது.

இரும்பு கரம்
திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். காவல்துறை மக்களோடு இணக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்; காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும். எந்த சூழலிலும் மக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நிகழாமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் இரு கைகள்
குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை போலீசார் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல் துறை. காவல் துறை மக்களுடன் நெருக்கமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

அமைதி பூங்கா தமிழ்நாடு
எல்லாருக்கும் எடுத்துக்காட்டாகத் திராவிட மாடல் ஆட்சியைத் தமிழகத்தில் வழங்கி வருகிறோம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதால் தான் புதிய தொழில் நிறுவனங்கள் வருகின்றன. அமைதியான சூழ்நிலையில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications