கொரோனா 3ஆம் அலை.. முன்னேற்பாடு பணிகளுக்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக ரூ 100 கோடியை ஒதுக்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், நாட்டில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவே ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

353 கோடி ரூபாய்
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக ரூ 100 கோடியை ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

எதற்குப் பயன்படுத்தப்பட்டது
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

RT PCR சோதனைகள்
இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்டி-பிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.
Recommended Video

Array
இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காகத் தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.

ரூ 100 கோடி ஒதுக்கீடு
தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications