இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்கள் விடுவிக்கவும் 75 மீன்பிடி படகுகளை மீட்க வலியுறுத்தியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நெடுந்தீவு அருகே இந்தியா எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்தனர்.

வெறும் 24 மணி நேரத்திற்குள், டிச.19 மற்றும் 20 தேதிகளில், 55 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து டிசம்பர் 21ஆம் தேதி மேலும் 13 மீனவர்களைக் கைது செய்தது இலங்கை கடற்படை. இவர்களில் 12 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கையில் உள்ள வெளியுறவுத் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து, தேவையான உதவிகளைச் செய்ததாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில், இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்கள் விடுவிக்கவும் 75 மீன்பிடி படகுகளை மீட்க வலியுறுத்தியும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவரத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் முதல்வர் கோரியுள்ளார். வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் எழுதியுள்ளார்" என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications