தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது 31 மணி நேர ஊரடங்கு.. கட்டுப்பாடுகள் என்ன? தளர்வுகள் என்ன? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 31 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 11 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று மட்டும் மாநிலத்தில் 10,978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பாசிட்டிவ் விகிதமும் அச்சமூட்டும் வகையில் 5ஐ தாண்டியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அறிவுறுத்தியுள்ளது.

31 மணி நேர ஊரடங்கு
அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல நாளை, ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள், திங்கள்கிழமை (ஜன. 10) காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அதாவது 31 மணி நேரம் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

திருமண நிகழ்வுகள்
நாளைய தினம் முழு ஊரடங்கு என்ற போதிலும் திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழுடன் வருவோரை அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளை குடிமைப் பணி தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதில் பங்கேற்கச் செல்வோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

புறநகர் ரயில்கள்
அதேபோல ஊரடங்கின் போதும், குறைந்த எண்ணிக்கையில் சென்னையில் புறநகர் ரயில் சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் வேக்சின் போட்டவர்களை கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரயில்களில் பயணிக்கலாம். மாஸ்க் அணியாத பயணிகளிடம் அதிகபட்சமாக சுமார் 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எதற்கு அனுமதி
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

ஞாயிறு ஊரடங்கு
ஞாயிற்றுக்கிழமை பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மேலும் முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
Recommended Video

வழிபாட்டுத்தலங்கள்
அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. இந்த அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை, அதாவது அடுத்த 31 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications