கொரோனா ஊரடங்கு.. என்ன செய்யக்கூடாது என டவுட்டா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. சூப்பர் அறிவிப்பு
சென்னை: கொரோனா ஊரடங்கு குறித்த சந்தேகங்களைத் தீர்க்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால், உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வந்தது.
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது.

கொரோனா வைரஸ்
உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சமடையத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மீண்டும் லட்சக் கணக்கில் தினசரி கேஸ்கள் பதிவாகி வருகின்றன. இதனால் உலக நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பல்வேறு நாடுகளும் வேக்சின் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருவதால், உயிரிழப்புகளின் விகிதம் குறைவாகவே உள்ளது,

தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் கூட இதே நிலை தான். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் குறைந்து வந்த கொரோனா மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும், பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரவு 10 முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் வரும் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இப்போது அமலில் உள்ள ஊரடங்கு முந்தை கால ஊரடங்கு போல இல்லாமல் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உதவி எண்கள்
இதனால் பொதுமக்களுக்கு எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை என்பது குறித்து குழப்பம் உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தொடர்பான தகவல்கள் பெறவும், சந்தேகங்கள் கேட்கவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 94981 81236, 94981 81239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய எண்களில் கொரோனா கட்டுப்பாட்டறை உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்கலாம்.

காவலன் எஸ்ஓஎஸ்
மேலும், இந்த உதவி மைய எண்கள், 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் போலீஸ் உதவி எண் 100 அல்லது ஒருங்கிணைந்த உதவி எண் 112 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலன் SOS செயலியையும் பொதுமக்கள் அவசர நேரங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications