#தமிழ்நாடு நாள் : தாய்நிலம் காக்க தமிழகம் நடத்திய வீரம்செறிந்த போராட்டங்கள்-கே.எஸ். ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தமிழ்நாடு உருவான நாள் நவம்பர் 1. இந்த நாளை தமிழகம் முதல் முறையாக கொண்டாடுகிறது.

இன்றைய தமிழ்நாடு அப்படி ஒன்றும் எளிதாகவும் உருவாகிவிடவில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பின் போது ஒவ்வொரு எல்லை நிலத்தையும் அண்டை மாநிலங்களுடன் சேர்த்துவிடாமல் இருக்க அன்றைய தலைவர்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் கட்டுரைகள்

கே.எஸ். ராதாகிருஷ்ணன் கட்டுரைகள்

தமிழ்நாடு நாள் உருவாக்கம் குறித்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளையும் எழுதி வருபவர் திமுகவின் செய்தி தொடர்பாளரான மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். ஏற்கனவே எழுதிய பல கட்டுரைகளை தமது சமூக வலைதளங்களில் மீள் பதிவாகவும் வெளியிட்டு வருகிறார். ஏராளமான வரலாற்று தரவுகளுடன் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய கே.எஸ். ராதாகிருஷ்ணனின் கட்டுரைகளில் ஒரு பகுதி:

 பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம்

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம்

இந்நிலையில், ஐக்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்துக்குச் சொந்தமான வேங்கடமலையையும் (திருப்பதி) தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் ‘மெட்ராஸ் மனதே' என்ற கோஷம் வைத்து போராடினார்கள்.

 எல்லைக் காவலர் ம.பொ.சி

எல்லைக் காவலர் ம.பொ.சி

சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை. தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்துக்குப் பெற சிலம்புச்செல்வர் ம.பொ.சி-யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சாரப் பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வட எல்லைப் பகுதிக்கு புகை வண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்போது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்னை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

 ம.பொ.சியை காப்பாற்றிய நெல்லை தமிழன்

ம.பொ.சியை காப்பாற்றிய நெல்லை தமிழன்

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி-யைத் தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி-யைக் காப்பாற்றியதாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 திருத்தணி மீண்டது

திருத்தணி மீண்டது

1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றார் ம.பொ.சி.. திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக - ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்னை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 தென் எல்லையில் பி.எஸ் மணி

தென் எல்லையில் பி.எஸ் மணி

ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார். கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார்.

 சளைக்காமல் போராடிய பிஎஸ் மணி

சளைக்காமல் போராடிய பிஎஸ் மணி

சாம் நதானியெல், நேசமணி போன்ற போர் குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி - அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக்கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்தபோதும்கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவு கிடைக்கப் பெற்றது.

 களத்தில் நேசமணி

களத்தில் நேசமணி

1954இல் ஜுனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

 திருவிதாங்கூர் போராட்டம்

திருவிதாங்கூர் போராட்டம்

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக்கூடாது என்று நியாயம் கேட்டார் மணி. 1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது.

 போர்க்களமான கன்னியாகுமரி

போர்க்களமான கன்னியாகுமரி

இதுகுறித்து கொச்சி முதலமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக்கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்துக்கும் தயார் இல்லை என்று தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்னையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக்கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன.

 16 தமிழர்கள் பலி

16 தமிழர்கள் பலி

1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர். நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர்.

 சமரசம்- ஏற்பாடுகள்

சமரசம்- ஏற்பாடுகள்

இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார். இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் - கொச்சி உள்ளடக்கிய கேரள முதலமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசிய பின் தேவிக்குளம் - பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் - பீர்மேடு கேரளத்துக்குச் சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரி - செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபோது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் - பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராஜர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவுக்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவுக்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்.

 சங்கரலிங்கனார் போராட்டம்

சங்கரலிங்கனார் போராட்டம்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சுந்தரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறைவேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார். 1956இல் தமிழகத்தின் விருப்பத்துக்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் - பீர்மேடு கேரளத்தில் சேர்த்துவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது.

இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+