இப்பவே "ஷாக் அடிக்குதே".. மின்சார துறையில் தமிழ்நாடு புது ரெக்கார்ட்! சிக்ஸர் அடித்த செந்தில் பாலாஜி
சென்னை: தமிழ்நாடு மின்சார பயன்பாட்டில் நேற்று புதிய சாதனையை படைத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டு உள்ளது. கிட்டத்தட்ட தினசரி வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவை எட்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

நேற்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.
கடும் வெயில் காரணமாக மக்கள் கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக எப்போதும் வெயில் காலத்தில் மின்சார தேவை அதிகரிப்பது போலவே தற்போது மின்சார தேவை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வெயில் காலம் காரணமாக மக்கள் பலரும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. அதேபோல் மக்கள் பலரும் வீடுகளில் நாள் முழுக்க ஃபேன் பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்துவிட்டது.
முக்கியமாக பலர் புதிதாக ஏசி வாங்குகிறார்கள். அதோடு நாள் முழுக்க ஏசியை ஓட விடுவதும் அதிகரித்துவிட்டது. இதனால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதில்,
தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 18/04/2023 தமிழ்நாட்டில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.30 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 13/04/2023ல், 40 கோடி யூனிட்கள் ஆகும்.

மெகாவாட் அளவில், நேற்று 18/04/2023 மாநிலத்தின் மின் நுகர்வு தேவை 18,882 மெகாவாட் ஆகும். இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச தேவை 13/04/2023ல் 18,667 MW ஆகும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இவ்வளவு தேவை அதிகரித்தாலும் அதனால் மின் தடை ஏற்படவில்லை. மின்தடை இல்லாமல் இந்த தேவையை தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து வருகிறது.
முன்னதாக கோடைக்காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். தமிழ்நாட்டில் ஏசி, ஏர் கூலர், ஃபேன் ஆகியவற்றின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து உள்ளது.
இதனால் மின்சார பயன்பாடு அதிகரித்து உள்ளது. இப்படியே சென்றால் மே மாதங்களில் இன்னும் தேவை அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த இப்போதே மின்சாரத்தை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்த வேண்டும்.
இப்படி கட்டுப்பாடு இல்லாமல் மின் பயன்பாடு உயர்ந்தால் கோடைக்காலத்தில் மின்வெட்டுகள் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும். அதனால் இப்போதே போதிய அளவிற்கு மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துங்கள். முடிந்த அளவு மின்சாரத்தை சிக்கனப்படுத்துங்கள்.. பகல் நேரங்களில் நாள் முழுக்க ஏசியை ஓட விடுவதை தவிருங்கள் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் ஆலோசனை வழங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications