ரூ. 2079 கோடி வெள்ள நிவாரணம் தேவை.. அமைச்சர் அமித் ஷாவுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு.. கோரிக்கை என்ன?
சென்னை: தமிழ்நாட்டிற்கு ரூ. 2079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. முக்கியமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தற்போது வடிந்துள்ளது.
ஆனால் அந்தமான் கடலில் ஏற்பட்ட தாழ்வு நிலை காரணமாக மீண்டும் வடதமிழ்நாட்டில் மழை தீவிரம் எடுத்துள்ளது. தொடர் மழை காரணமாக வடமாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தென் மாவட்டங்கள், சில டெல்டா மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சோதனை
இந்த நிலையில் மழை பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். சென்னையில் 3 நாட்கள் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின் கடலூரிலும், டெல்டா மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார்.

அறிவிப்பு
இதையடுத்து வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்படும் என்று முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இன்று நிவாரணம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்திப்பு நடத்தினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பில் தமிழ்நாட்டிற்கு ரூ. 2079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

கோரிக்கை
தமிழ்நாட்டிற்கு உடனடியாக மழை, வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். உடனடியாக 550 கோடி ரூபாயை முதல் கட்டமாக வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட கனமழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் 12 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.இந்த மாவட்டங்களில் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உடனடி நிவாரணம்
தேசிய பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து உடனடியாக தமிழ்நாடு அரசுக்கு நிதி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் 49,757 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. தமிழ்நாட்டில் நவ. 8 முதல் 11 ஆம் தேதி அதிக மழை பெய்துள்ளது. வழக்கத்தைவிட 49.6 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது, என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்தார்.

உறுதி
இதையடுத்து மழை, வெள்ள பாதிப்புகளை ஆராய குழு இன்று தமிழ்நாடு வருகிறது. 6 பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழ்நாடு வந்து ஆய்வு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு சார்பாக ஏற்கனவே அவசர நிவாரண பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications