“குட் நியூஸ்”.. தீபாவளியை முன்னிட்டு செவ்வாய் அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை
சென்னை: தீபாவளியை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் இந்து மக்களால் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.
சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான உணவு, பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

படையெடுக்கும் மக்கள்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்து உள்ளனர். நேற்றும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

விடுமுறை
ஏற்கனவே வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையை தொடர்ந்து திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் செவ்வாய் கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக புதுச்சேரி மாநிலத்தைப் போல தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து முடிவெடுத்து அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

செவ்வாய் விடுமுறை
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

சனிக்கிழமை பள்ளி
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது." என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தீபாவளி அன்றே சொந்த ஊரில் இருந்து கிளம்பும் சிரமத்தை தவிர்ப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் ஓரளவு குறையும்.












Click it and Unblock the Notifications