சம்மர் வந்தாச்சு.. கொடைக்கானலில் வெறும் 150 ரூபாயில் 12 சைட்ஸை பார்க்கலாமா? அசத்தும் தமிழக அரசு
சென்னை: கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கலாம். அசத்தலான இந்த ஆஃபரை எத்தனை நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
சம்மர் வந்தாச்சு... சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் கோடை வாசஸ்தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். குறைந்தபட்சம் இந்த ஊர்களுக்கு செல்ல முடியாவிட்டாலும் அருகே இருக்கும் தீம் பார்க்குகளில் நீர் விளையாட்டுகளை விளையாடி தங்கள் உடலின் வெப்பத்தை தணித்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் மக்களுக்கு பொருளாதார அளவில் உதவும் நோக்கில் தமிழக அரசு ஒரு அசத்தலான ஆஃபரை வழங்கி வருகிறது. இந்த ஆஃபர் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் இருக்கும். அதாவது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்குத்தான் இந்த ஜாக்பாட் காத்திருக்கிறது. வெறும் 150 ரூபாய் செலுத்தினால் போதும் 12 சுற்றுலா தலங்களுக்கு ஹாயாக செல்லலாம்.'

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, மற்றும் வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த சிறப்பான ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
1. அப்பர் லேக் வியூ- Upper lake View
2. மோயர் பாயிண்ட்- Moyar Point
3. பைன் காடுகள்- Pine Forest
4. குணா குகை- Guna Cave
5. தூண் பாறை- Pillar Rocks
6. பசுமைப் பள்ளத்தாக்கு- Green Valley View
7. கால்ஃப் மைதானம்- Golf Ground View
8. பாம்பார் ஆறு காட்சி- Pambar River View
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்- 500 years old tree
10. கோக்கர்ஸ் வாக்- Coaker's Walk
11. பிரையண்ட் பூங்கா- Briyant Park
12. லேக் (டிராப்)- Lake (Drop)
ஆகிய இந்த 12 சுற்றுலா தலங்களுக்கு மேற்கொண்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும். அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இந்த வாய்ப்பை ஏராளமான சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலனை கருத்தில் கொண்டு கோடையை செலவிட சுற்றுலா வரும் மக்களின் கைகளை கடிக்காத அளவுக்கு நல்லதொரு கட்டணத்தில் இந்த ஆஃபர் வழங்கப்படுவது உண்மையில் அனைவருக்குமே நல்லதொரு வாய்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications