"நெகிழ்ச்சி சம்பவம்!" நேற்று வரை கொத்தடிமைகள்.. இன்று முதல் முதலாளிகள்! தமிழக அரசின் சபாஷ் நடவடிக்கை
சென்னை: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகத் திருத்தணியில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோருக்கு அரசு சார்பில் செங்கல் சூளை அமைத்து வாழ்வாதாரம் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே கொத்தடிமை முறை இருந்து வருகிறது. இதை நீக்கத் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படுபவர், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்துத் தெளிவான நடைமுறைகள் இல்லை.

கொத்தடிமை
இதன் காரணமாகக் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படுவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இப்படி குழப்பம் நிகழ்வதால், மீட்கப்படும் கொத்தடிமைகள் வேறு வழியின்றி மீண்டும் செங்கல் சூளைகளுக்கே கொத்தடிமையாகச் செல்லும் மோசமான சூழல் உருவானது. இந்நிலையில், இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

திருவள்ளூர்
அதாவது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கத் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூபாய் 5 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து வீரகநல்லூர் கிராமம் பகத்சிங் நகரில் செங்கல் சூளை அமைக்கப்பட்டது.

செங்கல் சூளை
இதில் மீட்கப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் சூளைப் பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் தான் இந்த சூளையின் உரிமையாளர்கள் என்பதால் அதில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கான தொடங்க விழா நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் செங்கல் சூளை பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம்
செங்கல் சூளைக்குத் தேவையான மண் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட அவர்களுக்கு இந்த செங்கல் சூளை பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல் சூளைப் பணிகள் முடிந்ததும் செங்கற்களை விற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடுத்த கட்ட மூலப் பொருட்களை வாங்க அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருவேல மரங்கள்
தனியார் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கருவேலமரங்களை அகற்றுவதற்காகக் கத்தி போன்ற வெட்டு எந்திரங்களை வாங்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50,000 வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications