காலாவதியானது தமிழக அரசின் கொள்கை- தமிழகத்தில் மின்சார வாகன விலை 15% உயருகிறது!
சென்னை: தமிழக அரசின் மின்சார வாகன கொள்கையானது கடந்த ஆண்டுடன் முடிவடைந்துள்ளது. தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை வெளியிடப்படவில்லை. இதனால் தமிழகத்தில் மின்சார வாகனங்கள் விலை சுமார் 15% உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு மின்சார வாகன கொள்கை தொடர்பான வெளியிட்ட அறிவிக்கையில், புகை, மாசு இல்லாத நல்ல சுற்றுச் சூழலை உருவாக்க பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து போக்குவரத்து, போக்குவரத்து அல்லாத மின் வாகனங்கள் 03.11.2020 முதல் 31.12.2022 வரையிலான காலத்துக்கு 100% மோட்டார் வாகன வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளித்தது. 2020-ம் ஆண்டில் 3010 போக்குவரத்து வாகனங்களும் 8927 போக்குவரத்து அல்லாத மின் வாகனங்களும் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் 11937 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ அரசு தெரிவித்திருந்தது.

மேலும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.) 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030-ம் ஆண்டு வரை வழங்கப்படும்.
மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையும், மின்கலன் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இந்த சலுகை, 2025-ம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.அரசு தொழிற்பூங்காக்களில், மின்சார வாகனங்கள், மின்ஏற்று உபகரணங்கள் மற்றும் மின்கலன்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கு, நிலத்தின் விலையில் 20 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும். தென் மாவட்டங்களில் செய்யப்படும் இவ்வகை முதலீடுகளுக்கு, நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்த சலுகை 2022-ம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.மின்சார வாகனங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும் போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும். இந்த சலுகை, 2022-ம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.
மின்சார வாகனங்கள் மற்றும் மின்ஏற்று உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

நாட்டில் மொத்த மின்சார வாகனங்கள் எண்ணிக்கை 13,34,385. உ.பி.யில் 3,37,180, டெல்லியில் 1,56,393, கர்நாடகாவில் 1,20,532,, மகாரஷ்டிராவில் 1,16,646 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் 82,051 மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
நமது நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டை விட 2022-ல் மின்சக்கர வாகனங்கள் விற்பனை 300% அதிகரித்திருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.
100% மோட்டார் வாகன வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கும் இந்த கொள்கை முடிவு 2ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 2022-ம் ஆண்டுடன் இது காலாவதியாகிவிட்டது. தமிழக அரசு இன்னமும் புதிய மின்சார வாகன கொள்கையை அறிவிக்கவில்லை. இதனால் நடைமுறையில் மின்சார வாகனங்கள் விலை கிடுகிடுவென உயர உள்ளது. தற்போதைய விலையை விட சுமார் 15% மின்வாகனங்கள் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் மின்சார வாகன கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாக இருப்பதால் அத்துறையில் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர். உதாரணமாக தமிழக அரசு அண்மையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களுக்கும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இப்படி மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் தமிழக அரசு, மின்சார வாகனங்களுக்காக சலுகைகள் குறித்து அமைதி காப்பதால் இந்த துறையில் ஒருவித தேக்க நிலை ஏற்பட தொடங்கி இருக்கிறது என்கின்றனர். தமிழக அரசு இப்படி எதுவும் சொல்லாமல் இருப்பதால், மின்சார வாகனன்ங்களுக்கான முன்பதிவு மேற்கொள்வதில் குழப்பம் நீடிக்கிறது என்பதையும் அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications