தமிழ்நாட்டில் விருந்து மண்டபங்கள். விழாக்களில் மதுபான விநியோகத்துக்கான சிறப்பு உரிமம் அதிரடி ரத்து!
சென்னை: தமிழ்நாட்டில் விருந்து மண்டபங்கள், விழாக்கள் ஆகியவற்றில் மதுபானம் விநியோகிப்பதற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இருப்பினும், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இந்தச் சூழலில் இது குறித்து தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதாவது திருமண மண்டபங்களில் மது விநியோகத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.

இருப்பினும், இதற்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில், தமிழக அரசின் மது விநியோக சட்ட திருத்தம் நீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக பகுதிகள் இல்லாத இடங்களில் மது பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் நீக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அறிவிக்கை நீக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில், "வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு. தமிழ்நாட்டிலும் வழங்கி 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.

இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களைக் கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commerclal Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Corvention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருந்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைந்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications