கோவில்கள் தொடர்பான கோரிக்கைகளை பதிவிட.. புதிய இணையவழி திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக மக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட வசதியாக "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் புதிய இணையவழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதன் காரணமாகவே சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் வெளிப்படியாக பதிவேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார்.
திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்று வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார்.

உத்தரவு
இந்த நிலையில் தற்போது புதிதாக தமிழகத்தில் உள்ள கோயில்கள் தொடர்பாக மக்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட வசதியாக "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் புதிய இணையவழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள், மற்றும் கட்டடங்கள் பெருமளவில் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை மற்றும் குத்தகை நீட்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வரப் பெறுகின்றன.

அறிக்கை
மேலும் திருக்கோயில்களின் திருப்பணிகள், திருவிழாக்கள் மற்றும் இதர வைபவங்கள் குறித்தும் பக்தர்களும் பொதுமக்களும் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். முதல்வரின் உத்தரவின்படி திருக்கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட ஏதுவாக "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் ஓர் புதிய திட்டம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளமான hrce.tn.gov.in-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அலைபேசி எண்
கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் "கோரிக்கைகளைப் பதிவிடுக" எனும் திட்டத்தினைப் பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளைப் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோரிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவோர் தங்களது அலைபேசி எண் (கட்டாயம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி (கட்டாயம் அல்ல) ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.

பதிவேற்றம்
கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவைப்படின் ஸ்கேன் (Scan) செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம். கோரிக்கைகளைப் பதிவு செய்த பின்னர் தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் ஒப்புகை அட்டை அனுப்பப்படும். தங்களது கோரிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இணைய வழியாக அனுப்பப்படும்.

ஆணையர்
கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமன்றி, கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரால் விரிவாக ஆய்வு செய்யப்படும். சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளின் மீது 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், ஒப்புகை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்ணை உள்ளீடு செய்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம், என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications