இதென்ன நியாயம்? மாணவர்கள் தவறுக்கு அரபு மொழி ஆசிரியர்கள் கைதா? என்ஐஏவுக்கு ஜமாத்துல் உலமா கண்டனம்
சென்னை: அரபு மொழி ஆசிரியர் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.
கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலை காரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரில் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் இறந்தார். இது தொடர்பாக என்.ஐ.ஏ தொடர் விசாரணை மேற்கொண்டது. ஜமேசாவுடன் தொடர்புடைய முகமது அசாருத்தீன், முஹம்மது தல்கா, இஸ்மாயில், முஹம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

ஜமேசா முபின் 2019 ஆம் ஆண்டு என்ஐஏ விசாரணைக்கு ஆளானவர் என்பது விசாரணையில் தெரியவந்த நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த சனிக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் சென்னை, கோவை உள்பட தமிழ்நாட்டில் 21 பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் அரபு மொழி ஆசிரியர் உட்பட 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அரபு மொழி ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அனைத்து உலமாக்கள் மற்றும் ஜமாத்துகளுக்கு தலைமை தாங்கி வரும் ஜமாத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அந்த சபை வெளியிட்ட அறிக்கையில், “கோவையில் 2022 ஆம் ஆண்டு நடந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு தொடர்பான வழக்கை முறைப்படி என்.ஐ.ஏ. விடம் ஒப்படைத்தது தமிழ்நாடு காவல்துறை.
இவ்வழக்கில் இதுவரை 14 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ள நிலையில் திடீரென அரபிமொழி கற்பிக்கும் ஆசிரியர்களை நோக்கி விசாரணையைத் திருப்பி அரபு மொழி ஆசிரியர்களையும் மொழி பெயர்ப்பாளர்களையும் விசாரணைக்கு அழைத்து கைது செய்து உள்ளது என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமை. முஸ்லிம்கள் எல்லோரும் தமது வேத நூலாம் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளையும் அவற்றின் மூலமொழியாம் அரபு மொழியிலேயே கற்றறிந்திட விரும்புவர்.
அதற்காக ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்கும் மத்ரஸா எனும் பாடசாலைகளில் சிறுவயதிலேயே சேர்ந்து கற்பார்கள். சிறுவயதில் அம்மாதிரியான வாய்ப்பை தவறவிட்டவர்கள் அல்லது இழந்தவர்கள் பின்னர் அரபுமொழி கற்க விரும்பும் போது அதற்கான வாய்ப்புகளை சில மத்ரஸாக்கள் வழங்கி வந்தன. அவ்வாறான மத்ரஸாக்களில் கற்றுத் தேர்ந்தவர்கள் யாரோ சிலர் சில குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களாகி விட்டால் அல்லது சிக்கவைக்கப்பட்டால் அவர்கள் எப்போதோ கற்று வெளியேறிய மத்ரஸாக்களையும் அதன் ஆசிரியர்களையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வருவது மனித நீதிக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.
முஸ்லிம் சமுதாயத்துக்கும் அதன் அறிஞர்களுக்குமிடையே அச்சத்திற்குரிய இடைவெளியை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் என்.ஐ.ஏ. செயல்படுவதாகவே தோன்றுகிறது. தேவையற்ற பதற்றத்தை சமூகத்தில் உருவாக்கும் இச்செயலை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications