திமுக வீசிய 'ஷார்ப்' பந்து.. லாவகமாக விளையாடும் பாஜக.. குறட்டையோடு ரொம்பவே தூங்கி 'அழியுது' அதிமுக?
சென்னை: லோக்சபா தேர்தல் களம் இப்படித்தான் இருக்க வேண்டும் என திமுக வகுத்த 'திராவிட' வியூகத்தை புரிந்து கொண்டு பாஜக விளையாடத் தொடங்கிவிட்டது.. ஆனால் திமுக, பாஜக எனும் இரு எதிர்க் கட்சிகளின் விளையாட்டில் உக்கிரம் காட்ட வேண்டிய அதிமுக ஓரமாக ஒதுங்கி நிற்பது அந்த கட்சிக்கு பேரழிவைத் தந்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையார்கள்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கு சரியான அல்லது சமமான போட்டி அதிமுகதான். இரு கட்சிகளிடையேயா வாக்கு சதவீதம் மிகவும் சொற்பானது. இந்த ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுதான் ஆட்சி யார் கையில் என்பதை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.

திசை மாறும் தேர்தல் களம்: ஆனால் தமிழ்நாட்டின் லோக்சபா தேர்தல் களமானது, திமுக- அதிமுக என்பதாக இல்லாமல் திசை திருப்பிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. திமுக தலைமையைப் பொறுத்தவரையில் இடைவிடாமல் தொடர்ந்து பாஜகவை படுவேகமாக, சித்தாந்த ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதாலவும் சித்தாந்த ரீதியான எதிரியாக இருப்பதாலும் திமுக இயல்பாகவே பாஜகவை விமர்சிக்கிறது என்பதுதான் பொதுப் பார்வை.
பாஜகவின் விமர்சனம்: ஆனால் திமுகவின் இந்த உக்கிரமான பாஜக எதிர்ப்பு என்பதைத்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக- பாஜக இடையேயாதான் மோதல் என பட்டவர்த்தனமாக போட்டுடைத்துவிட்டிருக்கிறார். திமுகவுக்கு பதிலடி தருவதாக பாஜகவும் உக்கிரமாக திமுகவை விமர்சிக்கிறது. திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியை முன்வைத்து பாஜக விமர்சிப்பதும் இயல்பானதாகவே தெரியும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
திமுக- பாஜக: திமுகவைப் பொறுத்தவரை பாஜக என்பது தம்மை நெருங்கவே முடியாது ஒரு சிறு கட்சி. சொற்பமான வாக்கு சதவீதத்தை வைத்திருக்கக் கூடிய கட்சி. என்னதான் பாஜக தமக்கு பதிலடி கொடுத்தாலும் அது பாஜகவுக்கு வாக்குகளாக மடை மாறுமா? அப்படி பாஜகவுக்கு போகும் வாக்குகளால் திமுகவுக்கு பேராபத்தா? என்பதெல்லாம் வெளிப்படையான ஒன்று. இம்மியளவு கூட திமுகவுக்கு பாதிப்பே இல்லை என்பதுதான் யதார்த்தம்.
திமுக- அதிமுக: திமுக, அதிமுகவை விமர்சித்து கொண்டே இருந்தால், அதிமுகவுக்கு பதில் கொடுத்து கொண்டே இருந்தால் திமுக- அதிமுக என்ற யதார்த்த களம் வலுவானதாக இருந்திருக்கும். திமுக எதிர்ப்பை அதிமுக வலிமையோ பேசவும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அது திமுகவின் வெற்றிக்கு பெரும் பாதிப்பைத் தரக் கூடியதாகவும் இருந்திருக்கும்.
அதிமுகவுக்கு பேராபத்து: இதனால்தான் இயல்பாகவே திமுக தலைமை, பாஜக தலைமை இடைவிடாமல் வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவும் அதிமுகவை வெறுப்பேற்றுகிறோம் என்ற போக்கில் திமுக வீசுகிற பந்தை பிடித்துக் கொண்டு லாவகமாக எதிர்வினையாற்றுகிறது. திமுக- பாஜக ஆட்டத்தால் தேர்தல் களத்திலேயே அதிமுக காணாமல் போய்விடும் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.
சித்தாந்த மோதல் களம்: இது தொடர்பாக டிவி விவாதம் ஒன்றில் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி, பாஜக கூட்டணியில் மீண்டும் அதிமுகவை கொண்டு வரும் முயற்சிகள், பிரதமர் மோடியே எடப்பாடியிடம் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைப்பார் எனகிற எதிர்பார்ப்பு ஆகியவை பாஜகவில் இருக்கிறது. அதிமுகவில் அது இல்லை. களத்தில் பாஜக- திமுக என்ற நிலைமையை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள். அதைத்தான் இன்று அண்ணாமலையும் 9 ஆண்டுகால மத்திய ஆட்சியும் 3 ஆண்டுகால திமுக ஆட்சியும் என்கிற அடிப்படயில் பேசுகிறார். இதையே திமுகவும் செய்கிறது. இந்த விஷயத்தில் திமுக- பாஜக இணைந்தே செயல்படுகிறது. இப்படித்தான் நடக்கும் என நானும் சில ஆண்டுகளாக சொல்லியும் வருகிறேன். அதாவது களத்தை சித்தாந்த அரசியலாக- திராவிட- இந்துத்துவம்/ பாஜக- திமுக என உருவாக்குகிறார்கள். இதனால்தான் அதிமுகவை திமுக, பாஜக இரு கட்சிகளும் பொருட்டாகவே நினைக்காமல் மோதிக் கொண்டிருக்கின்றனர். இது அதிமுகவுக்கு பின்னடைவு. ஏனெனில் என்னதான் வாக்கு வங்கி இருந்தாலும் பொதுமக்கள் வாக்கு என்பது அதிமுகவுக்கு முக்கியமானது. பாஜக மீது இன்னமும் ஒரு சாஃப்ட் டோனில் அதிமுக பேசிவருவதும் அக்கட்சிக்கு நல்லதல்ல என வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி இருக்கிறார். விழித்துக் கொள்ளுமா அதிமுக?












Click it and Unblock the Notifications