கால் இருக்காது..அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல்.. பாஜக சசிகலா புஷ்பா மீது போலீசில் புகார்
சென்னை: தமிழக அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவை கைது செய்ய கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம் என அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்தார் அமைச்சர் கீதா ஜீவன்.

அமைச்சர் கீதா ஜீவனுக்கு பதிலடி தரும் வகையில் தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அக்கட்சியின் சசிகலா புஷ்பா பேசுகையில், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது.. திமுக மாவட்ட செயலாளராகிவிட்டதால் தலைகால் புரியாமல் இருக்கிறார். உங்கப்பா பெரிய ரவுடி..அவரையே அடக்கி ஒடுக்கி உட்காரவைத்தோம் என மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து கொந்தளித்த அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவாளர்கள் எனப்படுகிற சிலர், சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தினர். அவர் வீட்டில் இருந்த கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த நிலையில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா தரப்பில் சசிகலா புஷ்பா மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பாவை கைது செய்ய வேண்டும் என அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜிஜி சிவா வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் டிச21-ம் தேதி கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேசும் போது, எங்கள் தலைவன் ஒன்று சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி கோர்ட் வாசலில் உங்களை போல் நிற்கவில்லை என அநாகரீகமாக பேசியிருக்கிறார். சகோதரி சசிகலா புஷ்பா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் கீதா ஜீவனை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்துவிட்ட நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் மீது அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டுமென சசிகலா புஷ்பாவை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் சசிகலா புஷ்பா மீது திராவிட முன்னேற்ற கழகத்தின் தோழமை கட்சி என்ற அடிப்படையில் தேசிய முன்னேற்ற கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்பதை சசிகலா புஷ்பாவிற்கு சொல்லி கொள்கிறோம்.

கீதா ஜீவன் கால், மற்றும் நாக்கை வெட்டுவோம். தாங்கள் வீட்டில் இருந்து கிளம்ப முடியாது என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் இப்படி அமைச்சர் ஒருவரை அதுவும் பெண் அமைச்சரை கொலை மிரட்டல் விடுத்து சசிகலா புஷ்பாவின் பேச்சுக்கு தேசிய முன்னேற்ற கழகம் கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறது. சசிகலா புஷ்பா நீங்கள் யார் எப்படிப்பட்டவர் என்பது அரசியல் நாகரீகம் கருதி பேச வேண்டாம் என நினைக்கிறோம். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு பொதுமக்கள் மத்தியில் இப்படி கேவலமான அரசியல் பேசுவது ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு கிடையாது. அதற்காக அரசியல் மேடை இருக்கிறது. அமைச்சர் கீதாஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா போன்று அரைகுரை அரசியல்வாதிகளை தமிழக காவல்துறை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications