திரௌபதி முர்மு.. சமூக நீதி.. மொத்தமாக மோடியை புகழ்ந்து தள்ளிய எல்.முருகன்.. பேசியது செஸ் விழாவில்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல். முருகன், பிரதமர் மோடியை சமூக நிதியின் காவல் என்று குறிப்பிட்டார்.
Recommended Video
இந்தியாவில் முதல்முறையாக, சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்
இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ளக் குஜராத்தில் இருந்து மாலை பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை அளித்தார். அதன் பின்னர் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக மக்கள் மற்றும் தமிழர்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்பதாகத் தெரிவித்தார். மேலும் திரௌபதி முர்முபை குடியரசுத் தலைவராக்கியதன் மூலம் பிரதமர் மோடி சமூக நிதியின் காவலராக உருவெடுத்து உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் எல். முருகன்
இந்த நிகழ்ச்சியைப் பேசிய அமைச்சர் எல். முருகன், "இரு மாதங்களுக்கு முன்னர், மே 26ஆம் தேதி பிரதமர் மோடி இதே இடத்திற்கு வந்து தமிழ்நாட்டிற்குப் பல உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இரு மாதங்களில் அவர் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். நாம் இப்போது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக நடக்காத ஒரு விஷயத்தை நடத்திக் காட்டி வரலாற்று நாயகனாகப் பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார்.

வரலாற்று நாயகன்
ஒடிசாவில் சாதாரண கிராமத்தில் பிறந்த திரௌபதி முர்முவை நாட்டின் குடியரசுத் தலைவராக்கி வரலாற்று நாயகன் ஆகியுள்ளார் பிரதமர் மோடி. இதன் மூலம் அவர் சமூக நிதியின் காவலராக உருவெடுத்து உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவுக்கு அவர் பல திட்டங்களைக் கொடுத்துள்ளார். தமிழ்நாடு வளர்ச்சி, தமிழ் பாரம்பரியம், சிறப்பு ஆகியவற்றை உலகெங்கும் பிரதமர் மோடி எடுத்துச் சென்றுள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஐநாவில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று முழக்கமிட்டார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பாரதிக்கு இருக்கை அமைத்து பெருமை சேர்த்தார். தமிழருக்குப் பல பெருமைகளைச் சேர்த்த பிரதமர் மோடியைத் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன். வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் என்று தொடங்கும் திருக்குறளுக்கு ஏற்ப பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருகிறார்.

காரணம் யார் தெரியுமா
இந்தியாவில் முதல்முறையாகச் சென்னையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறப் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் தான் முக்கிய காரணம். அனிதா, சரத் கமல், மாரியப்பன், தீபிகா பல்லிக்கல் என விளையாட்டுத் துறையில் சாதித்த தமிழர்களுக்குப் பத்ம விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளன. இப்படி தமிழகத்தில் பல்வேறு உதவி திட்டங்களைப் பிரதமர் மோடி கொடுத்து வருகிறார்" என்றார்.

முணுமுணுப்பு
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்துப் பேசிய நிலையில், அமைச்சர் எல்.முருகன் மேடையிலிருந்து பிரதமர் மோடியைப் புகழ்வதிலேயே குறியாக இருந்தார். இதனைப் பலரும் இணையத்தில் சுட்டிக் காட்டி உள்ளனர். இன்று தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications