முன் ஜாமீன் கிடைப்பதற்கு முன் ராஜேந்திர பாலாஜி கைது? தமிழ்நாடு போலீஸின் மாஸ்டர் பிளான்.. பரபர தகவல்
சென்னை: பணமோசடி வழக்கில் தற்போது தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இருப்பினும், அதற்குள் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆட்சியில் இருந்த சமயத்திலேயே தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துப் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தவர்.
குறிப்பாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மோடிதான் இப்போது எங்கள் டாடி என்றும் அவர் இந்தியாவின் டாடி என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

ராஜேந்திர பாலாஜி
இந்தச் சூழலில், திமுக ஆட்சி அமைந்ததும் பலரும் அவர் மீது பண மோசடி புகார் அளித்தனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 புகார்கள் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

5 பிரிவுகளில் வழக்கு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்யத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தேடுதல் வேட்டை
ஏற்கனவே, குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் விரைவில் அவரை கைது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தமிழ்நாடு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

செல்போன் சிக்னல்
குறிப்பாக, செல்போன் சிக்னல் மூலம் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியிலும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 600 பேரின் மொபைல் எண்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருவதால், விரைவில் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video

விரைவில் கைது
உச்ச நீதிமன்றத்தில் இப்போது விடுமுறைக் காலம் என்பதால் முன் ஜாமீன் மேல்முறையீடு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரியும் ராஜேந்திர பாலாஜி சார்பில் கோரிக்கை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய வேண்டும் என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளதாலேயே, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மொபைல் எண்களை நோட்டமிடத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு போலீஸ்!












Click it and Unblock the Notifications