தென்கொரியாவிலிருந்து சைபர் தாக்குதல்.. ஹேக் செய்யப்பட்ட தமிழக போலீஸின் இணையதளம்! ஷாக்
சென்னை: தென்கொரியாவில் இருந்து சிலர் தமிழக போலீஸ் இணையதளத்தை முடக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1.5 லட்சம் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியம் தொடர்பான விவரங்கள், எஃப்ஐஆர் பற்றிய தகவல்கள், வழக்கு விசாரணை நிலை, சாலை விபத்து தகவல்கள் போன்ற விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதனை அறிந்துக்கொள்ள கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் என்ற பெயரில் (சி.சி.டி.என்.எஸ்.) இணைய தளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தை தென்கொரியாவிலிருந்து சிலர் ஹேக் செய்துள்ளனர்.

இது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ம் தேதியன்று இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்திருக்கிறது. இதனையடுத்து மற்ற டிஜிட்டல் தகவல் சேமிப்பு தளங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் அவை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. சி.சி.டி.என்.எஸ்-ஐ ஹேக் செய்தவர்கள் ரூ.16.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த இணையதளத்தில் பயனர்கள் உள்நுழைய ஓடிபி வசதி இருக்கும் எனவே இதனை ஹேக் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது.
இருப்பினும் இரண்டு பலவீனமான பாஸ்வார்ட்களை ஹேக்கர்கள் கண்டுபிடித்து அதன் மூலம் ஹேக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹேக்கிங் குறித்து உடனடியாக தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனை (ELCOT) அலர்ட் செய்யப்பட்டதால் மற்ற தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. இந்த ஹேக்கிங்கில் யார் ஈடுபட்டது என்பதை கண்டுபிடிக்க விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
9ம் தேதியன்று காலை ஹேக்கிங்கால் முடங்கிய காவல்துறையினர் இணையதளம், அன்று மாலைதான் மீட்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தென்கொரியாவில் இருந்துதான் இந்த சைபர் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்பது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. எனவே விரைவில் இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீஸார் கூறியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2012ம் ஆண்டு இதேபோல தமிழ்நாடு போலீஸின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications