தமிழ்நாட்டில் 2-ம் நாளாக ஆளுர் ஆர்என் ரவிக்கு எதிராக போராட்டம்- கோவை,புதுவையில் உருவபொம்மை எரிப்பு!
சென்னை: தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாட்டில் இன்று 2-வது நாளாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மையை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எரிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி உருவபொம்மையை எரித்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தயாரித்த உரையின் சில பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆளுந ரவி அந்த உரையை வாசித்தார். ஆளுநர் ரவியின் தன்னிச்சையாக உரை சபை குறிப்பில் இடம்பெறாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ஆளுநர் ஒருவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கண்டனக் குரல்கள் வலுத்தன. தமிழ்நாட்டு ஆளுர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கோவை சூலூர் பகுதியில் ஆளுநர் ரவியின் போட்டோவை நேற்று திமுகவினர் எரித்து போராட்டம் நடத்தினர். கோவை தெற்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நேற்று போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநர் ரவியின் உருவபொம்மையை நேற்று எரித்தனர். கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பல இடங்களில் தமிழ்நாடு வாழ்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தமிழ்நாடு, புதுச்சேரியில் தந்தை பெரியார் இயக்கத் தொண்டர்கள், மாணவர் அமைப்பினர் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
கோவை
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அமைப்பு செயலாளர் ஆறுசாமி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆளுநரின் உருவ பொம்மையை எடுத்து அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஆளுநர் ரவியின் புகைப்படத்தை எரித்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாணவர்கள்
தமிழக ஆளுநர் ரவியைக் கண்டித்து சேலம் அரசு கலை கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் சேலம் குமாரசாமிபட்டி பகுதியில் உள்ள சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று எடப்பாடி அரசு கலைக்கல்லூரி முன்பும் மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆளுநர் ரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் காமராசர் சிலை, இராஜா திரையரங்கம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டு ஆளுநர் ரவி உருவ பொம்மையை எரித்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். இப் போராட்டத்திற்கு தந்தை பெரியார் தி.க. தலைவர் வீரமோகன் தலையேற்றார். துணைத்தலைவர் மா.இளங்கோ, செயலாளர் சே.சுரேஷ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பெருமாள், மகளிரணி தலைவர் ஆ.சுகந்தி, இளைஞர் அணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் சு ஜெகன், மாணவரணி தலைவர் சக்திவேல், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் லோகு. அய்யப்பன், புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சாமிநாதன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன் நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், சரளா, பீ போல்டு பஷீர், அரியாங்குப்பம் தொகுதி தலைவர் முருகன், செயலாளர் பாஸ்கரன், மணவெளி தொகுதி தலைவர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் காளிதாஸ் ராஜசேகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் பதற்றம்
திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். இதில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உருவ பொம்மையை காலணியால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உருவ பொம்மையை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.













Click it and Unblock the Notifications