வருமான வரித் துறைக்குள் நுழைந்த கருப்பு ஆடு.. அரசியல்வாதிகள்னா சும்மாவா! தகிட தகிட தமிழ்நாடு
சென்னை: வருமான வரித்துறை இன்றைக்கு நடத்திய ரெய்டு குறித்து முன்கூட்டிய அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்கிறது.. எப்படி ஐடி ரெய்டு முன்பாக வெளியே கசிந்தது என்று உயர் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனால் வருமான வரித் துறைக்குள் நுழைந்த கருப்பு ஆடு யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. உண்மையில் இதில் உள்ள முக்கிமான மேட்டரை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் வருமான வரித்துறை முன்பெல்லாம் எப்போதாவது தான் நடக்கும்.. இப்போது வருமான வரித்துறை ரெய்டு அடிக்கடி நடக்கிறது. கடந்த சில மாதங்களில் மட்டுமே முக்கியமான அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களை குறி வைத்து ரெய்டு நடந்து வருகிறது.

செந்தில்பாலாஜியை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதன் பின்னர் கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது.
பொதுவாக வருமான வரித்துறையும், அதன்பின்னர் அமலாக்கத்துறையும் சோதனையும் நடத்தும். இதுதான் நடைமுறை, சில நேரங்களில் வருமான வரித்துறைக்கு முன்னரே அமலாக்கத்துறை நடத்துகிறது. அதன்பிறவே வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது. அப்படித்தான் சமீப காலமாக தமிழகத்தில் சோதனைகள் நடந்து வருகிறது. அரசியல்வாதிகளை தாண்டி, பெரிய தொழில் அதிபர்கள், மணல் குவாரி நடத்துபவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களின் நண்பர்களின் வீடுகளிலும் தமிழகத்தில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
செந்தில் பாலாஜி தொடங்கி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், எனஅடுத்தத்து திமுக புள்ளிகளின் வீடுகளின் ரெய்டு நடந்த நிலையில், பாஜகவின் அரசியல் பழிவாங்கல் என திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பின்னர் சிறையில் உள்ளார். இதனிடையே அடுத்து திமுகவில் யார் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் இன்று காலை முதல் சோதனை நடந்தது. இதேபோல் சென்னை அடையாறில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் தொடர்புடைய தலைமை அலுவலகம், உரிமையாளர்கள் வீடு , வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் கமலேஷ் ஜெயின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரர் அமீத் வீடு அலுவலகம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு என 80ஆக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று சோதனை நடந்தது.
வருமான வரித்துறை சோதனை என்பது வருமான வரித்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கே முதலில் தெரியும். கடைசி நேரத்தில் தான் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளுக்கு முழு விவரம் தெரியும். இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப் போகும் விவரம் அண்மைக் காலமாக முன்கூட்டிய கசிவதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
வருமான வரித்துறை ரெய்டு தகவல் வழக்கமாக நடந்த பின்னர் தான் ஊடகத்தினருக்கு தெரியும். ஆனால் இன்றைய ரெய்டு பற்றி ரெய்டு தொடங்கும் முன்பே ஊடகத்தினர் பலருக்கும் தெரிந்துவிட்டதாக ஐடி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். ஊடகத்தினருக்கே தெரியும் என்றால் ரெய்டு நடைபெற்ற இடங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கும் தெரிந்திருக்குமே என்று ஐடி அதிகாரிகள் கையை பிசைகிறார்கள்.
இன்று காலை பல ஊடகத்தினர் ரெய்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே போய் சேர்ந்து காத்திருந்ததை பார்த்த ஐடி அதிகாரிகள் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர். சென்னையிலுள்ள ஐடி அலுவலகத்தில் நேற்று இரவு அதிகாரிகள் குழுமிய தகவல் கசிந்ததுதான் இதற்கு காரணம். அரசியல்வாதிகள் ஐடி துறைக்குள்ளேயே சோர்ஸ் உருவாக்கி விட்டனர் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். சும்மாவா சொல்றாங்க அரசியல்வாதின்னா சும்மா இல்லைன்னு.












Click it and Unblock the Notifications