எண்ணி 2 மாதங்கள் தான்.. திமுக கதை குளோஸ்.. அன்புமணி ராமதாஸ் பகீர்
செங்கல்பட்டு: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளன. ஆட்சியை தக்க வைக்க திமுக முயற்சி செய்து வருகிறது. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராங்கத்தில் நடைபெற்ற அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுராந்தகம் பொதுக் கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

2 மாதங்களில் ஆட்சி மாற்றம்
அப்போது அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஊழல் கொடுங்கோல் ஆட்சி மக்களுக்கு விரோதமானது. பெண்களுக்கு எதிரான ஆட்சி. திமுகவின் ஆட்சி முடிவுக்கு மதுராந்தகம் கூட்டம் தொடக்கம் இது. ஒரு பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டை நடத்தியுள்ளோம்.
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும். மத்தியில் இருந்து தமிழகத்திற்கு உதவிகள் வரும். அத்தனை துறைகளுக்கும் கைக்கொடுப்போம் என்று உறுதியளித்துள்ளார். இது ஒரு தொடக்கம்.
இது தொடக்கம் தான்
அடுத்த 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிறைவேறும். அனைத்து தரப்பு மக்களும் இந்த ஊழல் ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள். இந்த மோசமான திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக தான் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். அதற்கான மிகப்பெரிய தொடக்கம் மதுராந்தகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications