"அடுத்த 2 நாட்களுக்கு.." தென்தமிழகத்தில் என்ட்ரி தரப்போகும் மழை! அப்போ சென்னை கிளைமேட்? பரபர அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவும் நிலையில், அடுத்து இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சமயத்தில் நல்ல மழை கிடைத்தது. குறிப்பாக டிச. தொடக்கத்தில் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல முக்கிய இடங்கள் நீரில் மூழ்கின.

அதன் பிறகு தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் நான்கு மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கணிசமாக நல்ல மழையே கிடைத்தது.
பருவமழை: இருப்பினும், வடகிழக்கு பருவமழை இப்போது முடிந்துவிட்ட நிலையில், அதன் பிறகு வறண்ட ஒரு வானிலையே நிலவி வருகிறது. தமிழகத்தில் எங்கும் பெரியளவில் மழை இல்லை. அதேநேரம் அதிகாலை நேரங்களில் பல்வேறு இடங்களிலும் பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் வாகனங்களை ஓட்டும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஜன.17) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
வானிலை: நாளை (ஜன.18) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (ஜன.19) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல ஜன.20 முதல் ஜன. 23 வரையிலான நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: அதேபோல ஜன.17 மற்றும் ஜன.18 தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்றார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் எங்கும் பெரிதாக மழை பெய்யவில்லை.. அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications