"ராக்கிங் மழை!" அடுத்த ஒரு வாரத்திற்கு இப்படிதான்! வெயில் எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு இதமாக சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல இடங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் உச்சம் தொட்டது.

அப்போதே இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பம் மிக மோசமாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதற்கேற்ப வெப்பம் இப்போது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வெப்பம்: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹூட்டை தொட்டது. இப்போது மாநிலத்தில் வெப்பம் எந்தளவுக்கு இருக்கிறது எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டில் கடந்த வாரம் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹூட் வரை கூட எட்டியது. அதீத வெப்பத்தால் பகல் நேரத்தில் வெளியே சென்றால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
இந்தச் சூழலில் கடந்த சில காலமாகவே வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மாநிலத்தில் பல இடங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தே வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடனும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இத்தனை நாட்கள் கோடை வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்கள், சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். மழையால் வெயில் சற்று குறைந்தே இருக்கிறது.
தமிழ்நாடு வெதர் மேன்: கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நேற்றைய தினம் அவர் தனது ட்விட்டரில், "மீண்டும் குமரி, நெல்லை பெல்ட் ராக்கிங் தான்.. வியாழக்கிழமை தென்காசியும் இந்த மழை லிஸ்டில் இணைந்துள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 4 வரை மழை பரவலாகவும் கனமழையாகவும் இருக்கும்.. இதன் காரணமாக மே முதல் வார இறுதி வரை வெப்பநிலை இயல்பைச் சுற்றி அல்லது இயல்பை விடக் குறைவாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மற்றொரு ட்வீட்டில், "அடுத்த Western Disturbance அடுத்த வாரம் வருகிறது. எனவே, தமிழ்நாட்டின் உள், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மே முதல் வாரம் வரை நல்ல மழை இருக்கும். இதனால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் நார்மலாக அல்லது அதை விடக் குறைவாகவே இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
வானிலை மையம்: இதேபோல சென்னை வானிலை ஆய்வு மையமும் வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதில் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வரும் மே 2ஆம் தேதி வரை மாநிலத்தில் பரவலாக மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications