விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு.. தமிழ்நாட்டிற்கு பிரச்சனையில்லை.. அண்ணாமலை விளக்கம்!
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது என்று கூறிவிட்ட போதும் திமுக நாடகமாடி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை கூட வராது என்று கூறிய அண்ணாமலை, அந்தந்த மாநிலங்களின் விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு 29 மாநிலங்களுக்கு தமிழக அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 24 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளன. இதனிடையே தமிழக பாஜக தரப்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களுடன் தொடர் பிரச்சனை இருக்கும் போது இந்த ஆலோசனை நடக்கிறது.
கேரளாவின் முல்லை பெரியாறு அணை விவகாரம், கேரளா மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டும் பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆட்சிக்கு வந்தபின் 4 முறை மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு பயணம் மேற்கொண்ட போதும், பிரச்சனையில் தீர்வு எட்டப்படவில்லை.
அதேபோல் கர்நாடகாவுடன் நீண்ட காலமாக காவிரி பிரச்சனை இருக்கிறது. ஒசூர் தொழில் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவேன் என்கிறார். அதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு எம்பி தொகுதி கூட குறையப் போவதில்லை. தொகுதி மறுசீரமைப்பு வந்தால், அந்தந்த மாநிலங்களின் விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு இருக்கும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டாலும், அந்தந்த மாநிலங்கள் உடனான பிரச்சனையை பேச வேண்டும்.
அதேபோல் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் நடத்த கோரினால், அது மத்திய அரசின் பணி என்று கூறுகிறார்கள். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேவந்த் ரெட்டியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
எந்த மாநில பிரச்சனை தொடர்பாக திமுக ஒரு கண்டனத்தை கூட கூறுவதில்லை. ஒசூர் மெட்ரோ தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. கடைசியாக 1971ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 449 தொகுதியாக இருந்த லோக்சபா எண்ணிக்கை, தற்போது 543ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7.31 சதவிகித அடிப்படையில் நாடாளுமன்றத்தில் விகிதாச்சார அடிப்படையில் எம்பிக்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்காது என்று கூறிவிட்ட போதும், திமுக நாடகமாடி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications