திமுக. மீது ரெஸ்பெக்ட் இருக்கு... ஆனா கூட்டணிதான்?? ஒன் இந்தியா தமிழில் மனம் திறந்த தமிமுன் அன்சாரி!
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து ஒன் இந்தியா தமிழில் மனம் திறந்துள்ளார்.
தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது கருத்த கேள்விக்கு வரும் காலம்தான் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
5 ஆண்டுகால எம்.எல்.ஏ. அனுபவத்தில் பல விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் தமிமுன் அன்சாரி பெருமையுடன் கூறியுள்ளார்.

தமிமுன் அன்சாரி சிறப்பு பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. கூட்டணி தொடர்பாக கட்சிகள் பம்பரமாக சுழன்று வருகின்றன. இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து ஒன் இந்தியா தமிழில் மனம் திறந்துள்ளார். நாம் அவரிடம் முன்வைத்த கேள்விகளுக்கு, அவர் சூடாக அளித்த பதில்களை பாருங்கள்.

எம்.எல்.ஏ. அனுபவம்
முதன்முதலாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இந்த 5 ஆண்டுகால அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?
சட்டமன்றத்தில் முதன்முதலாக எம்.எல்.ஏ.வாக காலடி எடுத்து வைத்தபோது அவை நடவடிக்கையை கூர்ந்து கவனித்தேன். அவை மரபுகள், சட்டவிதிகளை யாரும் எனக்கு சொல்லித் தரவில்லை. நானாக இவற்றை புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். கவன ஈர்ப்பு தீர்மானம், எப்படி உரை நிகழ்த்துவது? என்பது உள்ளிட்ட விஷயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவை நடவடிக்கையை பார்த்து கற்றுக் கொண்டேன். கடந்த 5 ஆண்டுகளில் மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக அதிகம் பேசிய உறுப்பினர்களின் நானும் ஒருவன். முதன்முறை எம்.எல்.ஏ.வாக இதில் சாதித்தில் பெருமிதம் கொள்கிறேன். இந்த 5 ஆண்டு காலத்தில் பல்வேறு தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் அனுபவங்களையும் பெற்றுக் கொண்டேன்.

கூட்டணி நிலைப்பாடு என்ன?
மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டணி நிலைப்பாடு என்ன?
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தோம். அ.தி.மு.கவில் பல குழப்பங்கள், சிக்கல்கள் நிலவியபோதும் அதிலேயே இருந்தோம். ஆனால் கடந்த நாடளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சமூகநீதி கொள்கைகளில் எதிர்மறை கொண்ட பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்ததால் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.வுடன் இணைய உள்ளதால் நாங்கள் இந்த கூட்டணிக்கு செல்ல கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இன்னும் 2 வாரத்தில் எங்கள் முடிவை அறிவிப்போம்.

தி.மு.க.வுடன் கூட்டணியா?
இந்த முறை நீங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி சேர போகிறீர்கள் என சொல்கிறார்களே?
நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தாலும் திமுக மீது எங்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. திமுக ஒரு கொள்கை பிடிப்புள்ள கட்சி. தி.மு.க. நடத்திய அனைத்து கட்சி கூட்டத்திலும் பங்கேற்றுள்ளோம். அவர்களின் நடவடிக்கையை பாராட்டி இருக்கிறோம். நாடளுமன்ற தேர்தலில் கூட காங்கிரஸ்-திமுக கூட்டணிக்காக வேலை செய்தோம். இது தொடர்பாக நல்ல முடிவு விரைவில் அறிவிக்கபப்டும்.

ஒவைசி மீதான பார்வை இதுதான்
ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி பற்றி உங்கள் பார்வை என்ன?
ஒவைசி கட்சியின் அரசியல் பாதையை கூர்ந்து கவனித்து வருகிறோம். வட இந்தியாவில் அவர்கள் களத்தை மேம்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் யாருடன் சேர வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். விரைவில் அந்த முடிவை அறிவிப்பார்கள்.

இஸ்லாமிய இயக்க பிளவு
இஸ்லாமிய இயக்கங்களுக்குள் ஏன் இவ்வளவு பிளவு?
ஒரு சமுதாயத்தில் பல கட்சிகள் இயங்குவது ஒருவகையில் ஆரோக்கியமானதுதான். ஒரு சமுதாயத்தில் பல கட்சிகள் இருந்தாலும், பொதுவான கருத்துகளில் அவர்கள் சேர்ந்து இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் உள்ள கட்சிகள் இணைவதை விட, பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த கட்சிகள், அமைப்புகள் இணைய வேண்டும்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லாவோடு மீண்டும் கைகோப்பிர்களா?
2012-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எங்களை அவர்கள் வெளியேற்றினார்கள். அதன்பிறகு நாங்கள் இந்த கட்சியை உருவாக்கி நன்கு உழைத்து வளர்த்துள்ளோம். அவர்கள் ஒரு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள். நாங்கள் ஒரு நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறோம். பொதுமேடைகளில் நாங்கள் சந்தித்து கொள்கிறோம். நாட்டின் நலன் கருதி பொது விவகாரங்களில், பொது நிகழ்வுகளில் கரம் கோர்ப்பதில் எந்த ஆட்சேபமும் எங்களுக்கு இல்லை. தற்போது அவரவர் தளத்தில், அவரவர் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

செயல்படுத்திய திட்டங்கள்
நாகை மாவட்டத்த்திற்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என்பது உன்னுடைய ஆசை. இது தொடர்பாக முதல்வரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தேன். அதன் பயனாக தற்போது நாகைக்கு ஒரு மருத்துவ கல்லூரி கிடைத்துளளது. ஒரு பெரிய சாதனையாக கருதுகிறேன். நாகை நம்பியார் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் பெற்று கொடுத்துள்ளேன். தொகுதியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 16-க்கும் மேற்பட்ட சிறு, பெரு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதிமுக அரசுடன் நான் முரண்பட்ட காரணத்தினால் பல கோரிக்கைகள் நிறைவேறாமல் போயிருக்கிறது. இதை இனி வரும் காலங்களில் செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

அதிமுக அரசு செயல்பாடு
அதிமுக அரசுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் எத்தனை?
இந்த அரசின் பல நடவடிக்கைகளை கடுமையாக கன்டித்துள்ளோம். பல நல்ல விஷயங்களை வரவேற்றும் இருக்கிறோம். புதிதாக மருத்துவ பல்கலைக்கழகம் அரசு அமைத்துள்ளளது. புதிய மாவட்டங்டகளை உருவாக்கி இருக்கிறார்கள். குடிமராமத்து பணிகள் ஓரளவு செய்யப்பட்டுளள்ன. மத்திய பாஜக அரசுக்கு பயந்து தமிழகத்துக்கு வர வேண்டிய உரிமைகளை அவர்கள் விட்டு கொடுத்து இருக்கிறார்கள். மதிப்பெண் கொடுக்க கூட அளவுக்கு நான் இன்னும் அரசியலில் வளரவில்லை. ஆனாலும் அரசை பொறுத்தவரை பாதி பாராட்டுகளும், பாதி விமர்சனங்களும் மதிப்பெண்ணாக வைப்பேன்.
மன நிறைவு
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, உங்கள் 5 ஆண்டு மக்கள் பணி மன நிறைவாக இருக்கிறதா?
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நான் தொகுதியில் பணியாற்றி இருக்கிறேன். எனது தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றுள்ளேன். அடிக்கடி குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்க உதவி இருக்கிறேன். கஜா புயலின்போது இரவு பகலாக நாகை பகுதியில் பணி ஆற்றியுள்ளோம். கொரோனா காலத்தில் தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைக்கும் சென்று நடவடிக்கையை பார்வையிட்டேன். நிவர் புயல், மழை, வெள்ள காலத்தில் சேதம் குறித்து கிராமம், கிராமாக ஆய்வு செய்தேன். மாதத்துக்கு 15 நாட்கள் நான் தொகுதியில்தான் இருந்திருக்கிறேன். எனக்கு மிகபெரிய மன நிறைவு இருக்கிறது.












Click it and Unblock the Notifications