பிரதமராக பதவியேற்ற மோடிக்கு விஜய் வாழ்த்து.. ஆனா ஸ்டாலினுக்கு இதுவரை நோ வாழ்த்து! நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. பிரதமர் மோடி இன்று மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.

நேருவுக்குப் பிறகு நமது நாட்டில் ஒருவர் மூன்றாவது முறையாகப் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர். இப்படி மொத்தம் 72 பேர் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மோடி: மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் வாழ்த்து: இது குறித்து தமிழக வெற்றி கழக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த வாழ்த்து செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதேநேரம் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றதற்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்று நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான போது நடிகர் விஜய், "நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்" என்று மட்டுமே அவர் பதிவிட்டிருந்தார்.
நேரடியாக அவர் ஸ்டாலினைக் குறிப்பிட்டோ அல்லது திமுகவைக் குறிப்பிட்டோ அவர் வாழ்த்து சொல்லவில்லை. அதேநேரம் ஆந்திரா தேர்தல் முடிவுகள் வெளியான போது அவர் பலன் கல்யாணைக் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறியிருந்தார். அப்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திராவில் மகத்தான வெற்றி பெற்ற பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள்.. ஜனசேனா கட்சி ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆந்திர மக்களுக்குச் சேவை செய்ய உங்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி பலருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்து போதிலும், அவர் திமுக கூட்டணிக்கும் ஸ்டாலினுக்கும் வாழ்த்து சொல்லவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications