களைக்கட்டிய ஈஸ்டர் கொண்டாட்டம்! காலையில் முதல் நபராக வாழ்த்து சொன்ன..தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
சென்னை: உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுக்க வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர்.. தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை கடைப்பிடிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. அதன்படியே உலகெங்கும் புனித வெள்ளியைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஈஸ்டர் கொண்டாட்டம்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு தேவாலயங்களில் குவிந்தனர். நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகளும் நடைபெற்றன. சென்னையைப் பொறுத்தவரை சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் தேவாலயம் உள்ளிட்ட முக்கிய சர்ச்சுகளில் பலர் திரண்டு வந்து சிறப்புப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். இரவு 11 மணிக்குத் தொடங்கிய இந்த பிரார்த்தனை அதிகாலை வரை நடந்தன.
திருப்பலியில் பூசிக்கப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது. பல சர்ச்சுகளில் இயேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வு விளக்குகளாலும் நாடகங்கள் மூலமாகவும் காட்டப்பட்டன. மேலும், தேவாலயங்களில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தேவாலயங்கள் முழுக்க ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
வாழ்த்து: உலகெங்கும் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் படம்: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினாலும் அவர் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார். நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள விஜய், வரும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து இருக்கிறார். மேலும், லோக்சபா தேர்தலில் யாரும் ஆதரவு இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் அதில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் நிலையில், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் யோகிபாபு என்று மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தமிழகம், கேரளா தொடங்கி வெளிநாடுகளிலும் நடைபெற்றது. இந்த படத்திற்குப் பிறகு விஜய் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications