”ப” வகுப்பறை.. அப்படியே காப்பியடிப்பதை விடுங்க! ஒரு டாக்டரா சொல்றேன்.. தமிழிசை கொடுக்கும் அட்வைஸ்!
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது பேசுபொருளானது. இந்நிலையில் எல்லாவற்றையும் காப்பி அடிக்கும் திமுக அரசு, 'ப' வகுப்பறையையும் காப்பி அடித்துள்ளதாகவும், இதனால் மாணவர்களின் உடல்நலனுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற மலையாள திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து கேரளாவில் 'ப' போன்ற மாணவர்களை அமர வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை பின்பற்றி தமிழகத்திலும் அதே போன்று மாணவர்களை அமர வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு கவனச் சிதறல், உடல்நலக் குறைவு ஏற்படும் என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு 'ப' வகுப்பறையையும் காப்பி அடித்துள்ளதாகவும், இதனால் மாணவர்களின் உடல்நலனுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை.
கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை. இதை முதலில் சரி செய்ய வேண்டும் எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல் மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்.
இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை. மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் இன்றும் பயன்படும் கேலரி போன்ற வகுப்பறைகளை அமைத்து ஆசிரியருக்கு தேவையான மேடை அமைத்து தெளிவான நவீன டிஜிட்டல் கல்வி கற்பிக்கும் திரைகளையும் போர்டுகளையும் அமைப்பதன் மூலமே இதை சரி செய்து விடலாம் இது போன்ற மாற்றங்களை மாணவர்களின் உளரீதியாக மனரீதியாக வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக காப்பி அடிப்பதை நிறுத்தி ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும்.
சமீபத்தில் கூட வகுப்பறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு பெல் டைம் என்பதை மணி அடித்து நினைவூட்டும் அரசாணை கையெழுத்திட்ட முன்னாள் புதுச்சேரி ஆளுநர் என்ற முறையில் அதை நான் வரவேற்பதுடன் அதே போன்று நல்ல திட்டங்கள் புதிய கல்விக் கொள்கைகளும் இருக்கின்றன. அதை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாகவே நம் மாணவர்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications