டாஸ்மாக்கே இறங்கியடிக்குது.. ஸ்டார் ஓட்டல்களுக்குள் நுழையும் ஆபீசர்ஸ்! தமிழக அரசு அடுத்த அதிரடி! சபாஷ்
சென்னை: ஸ்டார் ஓட்டல்கள் மற்றும் கிளப்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு விடுத்திருக்கிறது. என்ன காரணம்?
தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது கள்ளக்குறிச்சி சம்பவம்.. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 155-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்... இதில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து கைது நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர்..
நோட்டீஸ்: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டதை ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். மற்றொருபுறம், தலைமைச்செயலாளர், டிஜிபி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
60க்கும் மேற்பட்டோரை காவு வாங்கிய இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களில் அதிரடிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
மதுபானங்கள்: காரணம், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இது தவிர, நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்களிலும் மது விற்க தனியாருக்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது.
கிளப்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்பது, அரசு அனுமதி அளிக்காத மது வகைகளை விற்பது, அரசு அனுமதித்த நேரத்தை விட கூடுதல் நேரம் செயல்படுவது போன்ற ஏகப்பட்ட விதிமீறல்கள் நடக்கின்றன... இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லையாம். அதனால்தான், ஸ்டார் ஓட்டல்கள், கிளப்களில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மதுபானம்: இந்த குழுவில் கலால் துறை, மது விலக்கு ஆயத்தீர்வை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர், வருவாய் துறை ஆர்டிஓ ஆகியோர் அடங்கியிருக்கிறார்கள்.. இந்த குழுவானது, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடும் கிளப்கள், ஹோட்டல்களுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிகிறது. இறுதியில் ஆய்வு தொடர்பான அறிக்கையை கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications