தட்டி தூக்குது டாஸ்மாக்! வருமானம் கிடுகிடுவென உயர்வு! கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் குடிகாரர்கள்
சென்னை: தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் வருவாய் 2024 - 2025 ஆம் நிதி ஆண்டில் 48,344 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 45 ஆயிரத்து 855 கோடியாக இருந்த நிலையில் இது 2488.30 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில் டாஸ்மாக் மூலம் கிடைத்த வருவாய் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் 2024 2025 ஆம் நிதி ஆண்டில் அதாவது மார்ச் வரை ஆயத்த தீர்வை மூலம் வருவாயாக 11 ஆயிரத்து 20 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி விற்பனை வரி மூலம் 37 ஆயிரத்து 323 கோடியே 57 லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இது மொத்தம் 48,344 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அதாவது 2023 2024 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 45 ஆயிரத்து 855 கோடியே 70 லட்சமாக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே 2022 2023 நிதி ஆண்டில் 44,1213 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டை விட 4000 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சமாக 2021-2022-ம் நிதி ஆண்டில் மொத்த வருவாய் 36 ஆயிரத்து 50.65 கோடியாக இருந்தது, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக் வருவாய் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications