ஆதாரங்களை அள்ளிக் கொடுத்த விசாகன் ஐஏஎஸ்?உருளப் போவது ’யார்’ தலை? பிரபலங்களை வளைக்கும் அமலாக்கத்துறை?
சென்னை: தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையின் கீழ் டாஸ்மாக் மதுவிற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழகத்தில் இருமுறை சோதனை நடத்தியது. இந்நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-யிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பல முக்கிய தகவல்களையும், ஆதாரங்களை வழங்கியிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதை வைத்து திமுகவின் முக்கிய புள்ளியை வளைக்க ஈடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பின் கீழ் நடித்த பிரபலங்களிடம் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுவதாகவும், மதுபான ஆலைகள் டாஸ்மாக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பொய் கணக்கு காட்டி கோடிக்கணக்கில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அப்போது அதிகாரிகளை துன்புறுத்தியதாகவும் சோதனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதனை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அதிகாரிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயல்வது ஏன் என கேள்வி எழுப்பியது. மேலும் விசாரணைக்கு தடை இல்லை எனவும் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரத்தீஷ், பராசக்தி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை குறி வைத்து இந்த சோதனை நடைபெற்றது.
விசாகன் ஐஏஎஸ் வீட்டில் அவரிடமும் அவரது மனைவியிடமும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சென்னை எம்ஆர்சி நகரில் வசிக்கும் ரத்தீஷ் என்பவர் உடன் விசாகன் ஐஏஎஸ் தொடர்பில் இருந்ததாகவும், எந்த மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென ரத்தீஷ் விசாகனுக்கு அறிவுறுத்தியதாக சில வாட்ஸப் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியானது.
மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருக்கிறார். மேலும் ரத்தீசும் தற்போது தலைமுறைவாகியுள்ளார். இந்த நிலையில் ரத்தீஷ் திமுக இளைஞரணி தலைவரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என குற்றம் சாட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆகாஷ் பாஸ்கரன் உதவி இயக்குனராக இருந்து, ஒரே நேரத்தில் முக்கிய நடிகர்களை வைத்து படம் இயக்க பணம் எங்கிருந்து வந்தது எனவும் கேள்வி எழுந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க விசாகன் ஐஏஎஸ் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போன் லேப்டாப் ஆகியவற்றில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், முறைகேடு தொடர்பாக பல்வேறு தகவல்களை விசாகன் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சொல்லி இருக்கலாம் என தகவல் உலாவுகிறது. ஆனால் அதனை திமுக தரப்பு மறுத்து வருகிறது. மேலும், தனியார் வங்கி அதிகாரிகள், டாஸ்மாக் இயக்குனர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் கூடுதலாக கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை வைத்து திமுக முக்கிய புள்ளி ஒருவரை வளைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு பணம் தான் ஆகாஷ் பாஸ்கரன் மூலம் சினிமா தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரது தயாரிப்பின் கீழ் நடித்த நடிகர், நடிகைகளிடம் பணம் எப்படி பெறப்பட்டது, பண பரிமாற்றத்தின் வகை ஆகியவை குறித்தும் விசாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பும் என்கின்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications